விகாரமஹாதேவி சத்தியாகிரகத்திற்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் மாற்றமில்லை
கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு வலியுறுத்தி, விகாரமஹாதேவி பூங்காவின் புத்தர் சிலைக்கு அருகில் பிக்குகள் குழுவினர் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தடுத்து நேற்று (22) பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் எவ்வித மாற்றமும் செய்யப்பட மாட்டாது என கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (23) அறிவித்தது.
பிக்குகள் குழுவினர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவினர் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த பின்னரே கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரக இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
விகாரமஹாதேவி பூங்காவின் புத்தர் சிலைக்கு அருகில் பிக்குகள் தங்கியிருப்பதைத் தடுத்து தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை மாற்றி, அவர்கள் அங்கு தங்கியிருப்பதற்கு அனுமதி வழங்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.
எனினும், அந்த உத்தரவை மாற்ற மறுத்த பிரதான நீதவான், இந்த நீதிமன்ற உத்தரவை மீறியமை தொடர்பில் சிலரைக் கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்குமாறு பொலிஸார் விடுத்த கோரிக்கையையும் நிராகரித்தார்.
இவ்வாறான பிடியாணையைப் பிறப்பிப்பதற்கான போதிய காரணங்கள் இதன்போது வெளிப்படைத்தன்மையுடன் நிரூபிக்கப்படவில்லை என்றும், பொலிஸாருக்குத் தேவையெனில் குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையின் ஏற்பாடுகளுக்கு அமைய நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் நீதவான் சுட்டிக்காட்டினார்.

