நில அளவைச் சேவைக்குத் தேவையான வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்
அரச நில அளவையாளர் சங்கத்தின் 100ஆவது வருடாந்த மாநாடு இன்று (23) முற்பகல் பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நடைபெற்றது. இம்மாநாட்டில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டார்.
“கடந்த காலத்தைக் கௌரவித்து, நிகழ்காலத்தைப் பலப்படுத்தி, எதிர்காலத்தை வரைபடமாக்குவோம்” என்ற தொனிப்பொருளில் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நாட்டின் அரச பொறிமுறையில் பழமையான திணைக்களங்களில் ஒன்றான நில அளவைத் திணைக்களமும், நூற்றாண்டைப் பூர்த்தி செய்யும் அரச நில அளவையாளர் சங்கமும் தமது நீண்டகாலப் பயணத்தில் தொழில்சார் கண்ணியத்தையும் சேவைத் தரங்களையும் பேணிப் பாதுகாத்து, நாட்டின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு வழங்கிய விசேட பங்களிப்பை ஜனாதிபதி இதன்போது பாராட்டினார்.
மேலும், நவீன தொழில்நுட்பம் மற்றும் நவீன உபகரணங்களுடன் கூடிய நில அளவைச் சேவைக்குத் தேவையான வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
நவீன தொழில்நுட்பத்தையும் தொழில்சார் அறிவையும் பயன்படுத்தி முன்னோக்கிச் செல்வதுடன், நாட்டின் தேசிய அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான பயணத்திற்குப் பலமான பங்களிப்பை வழங்குமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.

