மோசமான வானிலை எதிரொலி: 12 மாவட்டங்களில் 12,000 பேருக்கு மேல் பாதிப்பு!

மோசமான வானிலை எதிரொலி: 12 மாவட்டங்களில் 12,000 பேருக்கு மேல் பாதிப்பு!

இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, 12 மாவட்டங்களில் 3,162 குடும்பங்களைச் சேர்ந்த 12,032 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

ஒக்டோபர் 23ஆம் திகதி காலை 6 மணி முதல் ஒக்டோபர் 27ஆம் திகதி காலை 6 மணி வரையான காலப்பகுதிக்கான நிலவர அறிக்கையின்படி, சீரற்ற வானிலையால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

மேலும், இரண்டு வீடுகள் முழுமையாகவும், 227 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

பாதிக்கப்பட்டவர்களில் 99 குடும்பங்களைச் சேர்ந்த 304 பேர் பாதுகாப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 243 குடும்பங்களைச் சேர்ந்த 853 பேர் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் மலையகப் பகுதிகளிலும் பாதிப்பு

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களும் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண மாவட்டத்தில் இரண்டு பிரதேச செயலாளர் பிரிவுகளில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் ஒரு பிரதேச செயலாளர் பிரிவில் 50 குடும்பங்களைச் சேர்ந்த 122 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், 50 குடும்பங்களைச் சேர்ந்த 122 பேர் பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ளதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

மலையகப் பகுதிகளைப் பொறுத்தவரையில், கண்டி மாவட்டத்தில் இரண்டு பிரதேச செயலாளர் பிரிவுகளில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, நுவரெலியா மாவட்டம் குறித்த அறிக்கையில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் பட்டியலில் இடம்பெறவில்லை.

புத்தளம் மற்றும் இரத்தினபுரியில் அதிக பாதிப்பு

மாவட்ட ரீதியாக அதிக பாதிப்பு புத்தளம் மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. அங்கு 2,166 குடும்பங்களைச் சேர்ந்த 8,446 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி மாவட்டத்தில் 741 குடும்பங்களைச் சேர்ந்த 2,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 243 குடும்பங்களைச் சேர்ந்த 853 பேர் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.

மேலும், ஆறு பாதுகாப்பு மையங்களில் 42 குடும்பங்களைச் சேர்ந்த 155 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் 96 குடும்பங்களைச் சேர்ந்த 312 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 61 குடும்பங்களைச் சேர்ந்த 218 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

manel