பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானிக்கு ஐக்கிய அரபு இராச்சியத்தின் உயரிய விருது!
பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் துணிச்சலுடன் செயற்பட்ட இந்திய விமானி கெப்டன் ஸ்மித் மச்சார் மற்றும் ஃப்ளைடுபாய் விமானக் குழுவினருக்கு ஐக்கிய அரபு இராச்சியம் உயரிய விருதை வழங்கிக் கௌரவித்துள்ளது.
துபாயிலிருந்து டெல் அவிவ் நோக்கிப் பயணித்த FZ1073 விமானத்தில் ஏற்பட்ட தீவிரமான சம்பவத்தின்போது, பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் துணிச்சலுடன் செயற்பட்ட விமானி உள்ளிட்ட குழுவினருக்கு, ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் நேற்று (27) ‘Order of Zayed II’ விருதின் முதலாம் தரத்தை வழங்கினார்.
கடந்த செப்டெம்பர் 30ஆம் திகதி விமானத்தின் விமானி அறையில் ஏற்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, குறித்த விமானம் சவூதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்திற்குத் திருப்பிவிடப்பட்டது.
இதன்போது விமானி ஸ்மித் மச்சார் காயமடைந்த போதிலும், விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த 172 பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து நெருக்கடியான சூழ்நிலையைத் துணிச்சலுடன் கையாண்ட விமானக் குழுவினரின் செயற்பாட்டைப் பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

