நாம் ஆதரவாக வாக்களிப்பது சஜித்துக்குத் தெரியும்- ராதா

நாம் ஆதரவாக வாக்களிப்பது சஜித்துக்குத் தெரியும்- ராதா

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அறியப்படுத்தியதன் பின்னரே, தாம் உள்ளிட்ட மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு வழங்கியதாக பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். 

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கிய போதே, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 400 ரூபாயினால் அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

இதன்காரணமாகவே நாம் நேற்று அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கினோம். 

பெருந்தோட்ட தொழிலாளர்களினால்தான் நாங்கள் பாராளுமன்றம் வந்துள்ளோம். 

அவர்களுக்கு ஏதேனும் நன்மை கிடைக்குமாயின் நாங்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க முடியாது. 

இதன்மூலம் அரசாங்கத்துடன் இணைவோம் என எதிர்பார்க்க வேண்டாம். 

எனினும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் சிறந்த வேலைத்திட்டங்களுக்கு எமது ஆதரவை வழங்குவோம். 

நாம் சஜித் பிரேமதாசவுக்கு இது தொடர்பில் தௌிவுப்படுத்தினோம். 

இவ்வாறானதொரு சூழலில் நாம் எதிர்த்து வாக்களிப்போமானால், மக்கள் எங்களுடன் முரண்படுவார்கள் என கூறினோம். 

ஊடகவியலாளர் – மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பிலும் ஆதரவு வழங்குவீர்களா? 

இராதாகிருஸ்ணன் – ஆம் நிச்சயமாக வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு வழங்குவோம் எனத் தெரிவித்தார்

எஸ். ரஜீவன்