கொழும்பில் பிரமாண்டமாக நடைபெற்ற MACL தேசிய ஒப்பனை கலைஞர் போட்டி 2026

கொழும்பில் பிரமாண்டமாக நடைபெற்ற MACL தேசிய ஒப்பனை கலைஞர் போட்டி 2026

இலங்கையின் முன்னணி ஒப்பனை கலைஞர்களை ஒன்றிணைக்கும் நோக்கில், இலங்கை ஒப்பனை கலைஞர் சங்கத்தினால் (Makeup Artist Club of Lanka – MACL) ஏற்பாடு செய்யப்பட்ட “தேசிய ஒப்பனை கலைஞர் போட்டி 2026” (National Competition for Makeup Artist 2026) அண்மையில் கொழும்பு தனியார் நட்சத்திர ஹோட்டலில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது.

“ஒன்றிணைவோம், ஒன்றாய் வளர்வோம்” (Join Together, Grow Together) என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வு, நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்த திறமையான ஒப்பனை கலைஞர்கள் மற்றும் கலைத்துறை சார்ந்த வல்லுநர்களுக்கு ஒரு சிறந்த தளமாக அமைந்தது.

இந்நிகழ்வு குறித்து ஊடகங்களுக்கு விபரித்த MACL அமைப்பின் நிறுவனரும் தலைவியுமான திருமதி அனு குமரேசன் அவர்கள், இலங்கையின் ஒப்பனைத்துறை, சிகை அலங்காரம் மற்றும் அது சார்ந்த கலைத்துறைகளில் உள்ள திறமையாளர்களை ஒன்றிணைக்கும் ஒரு பிரதான தளமாக இந்த அமைப்பை தாம் வழிநடத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.

இதில் நாட்டின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த கலைஞர்களும் தங்களோடு இணைந்துள்ளதாகவும், இது தங்களது அமைப்பின் தொடர்ச்சியான 3-வது தேசிய மட்டப் போட்டி என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், இப்போட்டியானது வெறும் திறமைக்கான தளம் மட்டுமல்லாது, உள்நாட்டு கலைஞர்களை சர்வதேச போட்டிகளில் பங்கேற்கச் செய்வதற்கான ஒரு தயார்படுத்தல் நிகழ்வாகவும் அமைகிறது என அவர் சுட்டிக்காட்டினார்.

காலை 8 மணிக்கு ஆரம்பமான பதிவுகளைத் தொடர்ந்து, பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன.

இம்முறை போட்டிகளில் பிரீ-டான் (Pre-done) மற்றும் நேரடிப் போட்டி (Live category) என இரு பிரிவுகளின் கீழ் கிட்டத்தட்ட 19 போட்டிப் பிரிவுகள் நடத்தப்பட்டன. மேற்கத்திய ஒப்பனை, சேலை கட்டும் கலை, சிகை அலங்காரம், பிறந்தநாள் கேக் அலங்கரிப்பு, ஆரி வேலைப்பாடு, மெஹந்தி வடிவமைப்பு, நக அலங்காரம் மற்றும் கண்டி பாரம்பரிய ஒப்பனை போன்ற பல பிரிவுகளில் போட்டியாளர்கள் தங்களின் அசாத்திய திறமைகளை வெளிப்படுத்தினர்.

இப்போட்டிகளில் பெண்கள் மட்டுமன்றி, பெருமளவிலான ஆண்களும், இளந்தலைமுறையினரும் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டமை இம்முறையின் சிறப்பம்சமாகும் என அனுக் குமரேசன் தெரிவித்தார்.

மங்கள விளக்கேற்றல், தேசிய கீதம் இசைத்தல் மற்றும் இறைவணக்கத்துடன் உத்தியோகபூர்வ நிகழ்வுகள் ஆரம்பமாகின. அத்துடன், அண்மையில் மறைந்த கலைஞர் திரு. சுமுது வசந்த அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதோடு, நடுவர் குழுவினர் மற்றும் சங்கத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

பிற்பகல் அமர்வானது விசேட விருந்தினர்களின் வருகையுடன் கலைகட்டியது. சங்கத்தின் நிறுவனர்கள், செயலாளர், பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், அனுசரணையாளர்கள் மற்றும் விசேட விருந்தினர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.நாடா வெட்டப்பட்டு, MACL கொடி அறிமுகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 2026 ஆம் ஆண்டிற்கான விருது வழங்கும் விழா உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

விழாவின் முக்கிய அம்சமாக அமைந்த “மணப்பெண் ஆடை அலங்காரக் காட்சி” (Bridal Show) பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. இதில் பங்கேற்ற கலைஞர்களுக்கு பாராட்டுச் சின்னங்களும், அனைத்து போட்டியாளர்களுக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

நிகழ்வின் இறுதிப் பகுதியில், வட மாகாணத்திற்கான வெற்றியாளர்கள் (1ஆம் இடம் முதல் 5ஆம் இடம் வரை) மற்றும் “தேசிய ஒப்பனை போட்டி 2026” இன் ஒட்டுமொத்த தேசிய மட்ட வெற்றியாளர்களின் விபரங்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

தமது அமைப்பு இத்தகைய தேசிய போட்டிகளுக்கு அப்பால், கலைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் பல இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிப் பட்டறைகளையும் (Free Skill Workshops) வருடாந்தம் நடத்தி வருவதாகத் தெரிவித்த தலைவர் அனுக் குமரேசன், எதிர்காலத்தில் மேலும் பல கலைஞர்கள் இந்த அமைப்போடு இணைந்து பயனடையுமாறு அழைப்பு விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

manel