முஸ்லிம் அதிகாரிகளுக்கான நேரத்தை மாற்றுமாறு விடுத்த கோரிக்கை ஏற்பு!
ஜனாதிபதி கலந்து கொள்ளும் அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள முஸ்லிம் அதிகாரிகளுக்கான வருகை நேரத்தை மாற்றியமைப்பதற்கு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் உடன்பாடு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை விடுத்த கோரிக்கையை அடுத்தே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸானாயக்க கலந்து கொள்ளும் அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் எதிர்வரும் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பி.ப 2.00 மணிக்கு நடைபெற ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அம்பாறை மாவட்ட அரச திணைக்களங்களின் முஸ்லிம் அதிகாரிகளை பி.ப 12.30 மணிக்கு வருகை தருமாறு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரினால் முன்னதாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
எனினும், அன்றையதினம் வெள்ளிக்கிழமை புனித ஜும்ஆ தொழுகை நாளாக இருப்பதனால், முஸ்லிம் அதிகாரிகள் தொழுகைக்குச் செல்ல வேண்டிய தேவையுள்ளது என்பதை பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை, மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
அதற்கமைவாக, முஸ்லிம் அதிகாரிகள் ஜும்ஆ தொழுகையை நிறைவு செய்துவிட்டு சமூகமளிக்கும் வகையில், அவர்களின் வருகை நேரத்தை பி.ப 1.30 மணி வரை மாற்றி அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இக்கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் அனுபமா மங்கள விக்கிரமாராச்சி, முஸ்லிம் அதிகாரிகள் பி.ப 1.30 மணிக்கு வருகை தருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பையிடம் உறுதியளித்துள்ளார்.

