தேசிய விருதை இருமுறை வென்ற கிழக்கின் பெண் ஊடக ஆளுமை மட்டு!
தேசிய விருதினை இருமுறை வென்ற ஊடக ஆளுமை ‘மட்டு. துஷாரா’ மட்டக்களப்பு தமிழ் சங்கத்தில் கௌரவிப்பு!
இலங்கை பத்திரிகை பேரவையின் தேசிய ரீதியிலான விருதினை இருமுறை பெற்றுக்கொண்ட கிழக்கின் முன்னணி பெண் ஊடகவியலாளரான திருமதி துஷ்யந்தி சுரேஸ் (மட்டு.துஷாரா) அவர்களின் எழுத்துப் பணியைப் பாராட்டிய சிறப்பு கௌரவிப்பு நேற்றையதினம் (17) வழங்கி வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு தமிழ் சங்கத்தில் நடைபெற்ற கவிமகள் ஜெயவதியின் இரு நூல்கள் வெளியீட்டு நிகழ்வின்போது மட்டு. ஊடக நிறுவனம் சார்பில் இந்த சிறப்பு கௌரவிப்பு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், மட்டு. ஊடகத்தின் சார்பில் ஆதித்தி நெசவு நிலையத்தின் பணிப்பாளரும், துணை ஆசிரியரும், தொகுப்பாளினியுமான திருமதி கீதா சுதாகரனினால், ஊடக ஆளுமை மட்டு. துஷாரா அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னத்தையும் வழங்கி கௌரவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கும், சீலாமுனை மண்ணிற்கும் பெருமை சேர்த்து ஊடகத்துறையில் தடம் பதித்துள்ள திருமதி துஷ்யந்தி சுரேஸ் அவர்களின் எழுத்துப் பணி போற்றுதலுக்குரியதாகும். வீரகேசரி, தமிழன், தினக்குரல் போன்ற தேசியப் பத்திரிகைகளிலும் தமிழ் மிரர், ஈழநாடு, காலைக்கதிர், மாலை முரசு போன்ற மின்னிதழ் பத்திரிகைகளிலும் இவரது செய்திகளும், கட்டுரைகளும் நாளாந்தம் வெளியாகி வருகின்றன.
குறிப்பாக, தேசிய பத்திரிகையான ‘தமிழன்’ வார இதழின் ‘ஹேல்த்’ சஞ்சிகையில் ஆயுர்வேதம் மற்றும் அலோபதி மருத்துவ ஆக்கங்களை பல ஆண்டுகளாக இவர் தொடர்ச்சியாக எழுதி வருகின்றார். இதன் மூலம் பொதுமக்களின் சுகாதார விழிப்புணர்விற்கு இவர் ஆற்றிவரும் பங்களிப்பு அளப்பரியதாகும்.
பிரதேச, மாவட்ட மற்றும் மாகாண ரீதியிலான பல கௌரவங்களைத் தாண்டி, இலங்கை பத்திரிகைப் பேரவையினால் வழங்கப்படுகின்ற உயரிய தேசிய விருதினை இருமுறை வென்ற கிழக்கு மாகாணத்தின் ஒரே பெண் ஊடகவியலாளர் என்ற வரலாற்றுப் பெருமைக்குரியவராக திருமதி துஷ்யந்தி சுரேஸ் (மட்டு.துஷாரா) விளங்குகின்றார்.
அத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க ஊடகத்துறை ஆளுமையை வாழ்த்தி, கௌரவிப்பதில் மட்டு. ஊடக நிறுவனம் பெருமிதமடைகிறது.

