சிறுமிக்கு நீதி கோரி திருகோணமலையில் இன, மதங்களைக் கடந்த அமைதிப் போராட்டம்
அனுராதபுரத்தில் பௌத்த துறவி ஒருவரால் சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்தும்,
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கோரியும் திருகோணமலை மாவட்ட தலைமை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்றைய தினம் (29.05.2026) மாலை அமைதியான கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தில் தமிழ் மற்றும் சிங்கள சமூகங்களைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பெண்கள் அமைப்புப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் இன, மத வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைந்து பங்கேற்றனர்.
முக்கிய கோரிக்கைகள்:
குற்றம் செய்பவர் எவராயினும் பாரபட்சமின்றி சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
மத ஆடையின் பின்னால் குற்றவாளிகள் தப்பிக்க இடமளிக்கக்கூடாது.
சம்பவம் தொடர்பில் சுயாதீனமான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
சிறார்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
“சட்டம் அனைவருக்கும் சமமானது; மதங்களுக்கு அப்பால் நீதி நிலைநாட்டப்பட வேண்டும்” என்பதை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, அமைதியான முறையில் தங்களது கண்டனத்தையும் கோரிக்கைகளையும் போராட்டக்காரர்கள் முன்வைத்தனர்.

