இரத்தினபுரி மாவட்ட தமிழ் மொழி மூலமான பாடசாலைகள் புதியதொரு அபிவிருத்திப் பாதையை நோக்கி!

இரத்தினபுரி மாவட்ட தமிழ் மொழி மூலமான பாடசாலைகள் புதியதொரு அபிவிருத்திப் பாதையை நோக்கி!

இறக்குவானை அஸ்ஸலாம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 80வது ஆண்டு நிறைவு விழாவில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவிப்பு

கடந்த கால புறக்கணிப்புகளைத் தகர்த்து இரத்தினபுரி மாவட்ட தமிழ் மொழி மூலமான பாடசாலைகள் புதியதொரு அபிவிருத்திப் பாதையை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.

“ஒரு சமூகத்தின் உண்மையான விடுதலை, எழுச்சி மற்றும் ஒட்டுமொத்த விருத்தி என்பது அச்சமூகத்தின் கல்வி வளர்சியிலேயே தங்கியுள்ளது” எனவும் அவர் குறிப்பிட்டார்.

இறக்குவானை அஸ்ஸலாம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 80வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டும் நேற்றைய தினம்(29/05) 2 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட கணித செயற்பாட்டு அறை மற்றும் பாடசாலை கட்டிடங்களை புணர் நிர்மாணித்து மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்காக திறந்து வைத்து உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில் ,

கடந்த காலங்களில் இரத்தினபுரி மாவட்டத்தில் தமிழ் மொழி மூலமான பாடசாலைகளில் பல்வேறு குறைபாடுகள் காணப்பட்டன. முறையற்ற வளப் பகிர்வு மற்றும் இனவாதச் செயல்பாடுகளுக்கு அவை முகம் கொடுதிருந்தன. குறிப்பாக ஆசிரியர் நியமனங்கள் மற்றும் பௌதீக வளங்கள் ஒதுக்கப்படும் போது தமிழ் மொழிப் பாடசாலைகளுக்கு மிகக் குறைந்த அளவிலேயே வழங்கப்பட்டன.

இந்த நிலையை மாற்றியமைக்கும் பொருட்டு அமைச்சராகப் பொறுப்பேற்ற உடனேயே முதலாவது வேலைத்திட்டமாக ஆளுநர், மாகாண சபை மற்றும் கல்வி உயர் அதிகாரிகளை உள்ளடக்கிய அவசரக் கூட்டம் ஒன்றைக் கூட்டி தமிழ் மொழி மூல பாடசாலைகளின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுத்தோம்.

அதன் மூலம் கடந்த 2025 ஆம் ஆண்டில் இரத்தினபுரி மாவட்ட வரலாற்றிலேயே முன்னெப்பொழுதும் இல்லாதவாறு தமிழ் மொழி மூலமான பாடசாலைகளுக்குப் பெருமளவிலான நிதி ஒதுக்கப்பட்டது.

மாவட்டத்தின் கல்விக்காக 350 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக தற்போது பல பாடசாலைகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுகின்றன. பல அபிவிருதிப் பணிகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய நிலை குறித்தும் பேசிய அவர், 2026 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்சி 6 சதவீதமாக உயர்ந்துள்ளதுடன் அந்நிய செலாவணி கையிருப்பும் கணிசமாக அதிகரித்துள்ளது.

நாட்டின் வரலாற்றில் மிகக் கூடுதலான ஏற்றுமதி வருமானத்தை இந்த ஆண்டில் நாடு பெற்றுள்ளதுடன், அரசியல் தலையீடுகள் இன்றி அரச ஊழியர்கள் சுதந்திரமாகச் செயலாறும் சூழல் உருவாக்கப்பட்டு ஊழலற்ற நிர்வாகம் உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

இறக்குவானை தேர்தல் தொகுதியின் தலைவர் என்ற வகையில் இப்பகுதி மக்களின் தேவைகளை நன்கு அறிவதாகக் குறிப்பிட்ட அவர், மிக முக்கியமாக
இன்னும் ஓரிரு மாதங்களில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படும் போது இறக்குவானை அஸ்ஸலாம் முஸ்லிம் பாடசாலையில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் நிச்சயமாக முழுமையாக்கப்படுவதோடு
பாடசாலை அதிபரால் முன்வைக்கப்பட்ட புதிய கட்டடத்திற்கான கோரிக்கை, புதிய திட்டங்களின் கீழ் உள்ளீர்கப்பட்டு நிச்சயம் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.

அத்தோடு இறக்குவானை நகரம் இயற்கை எழில் கொஞ்சும் இரத்தினபுரி மாவட்டத்தின் சிறந்ததொரு சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் வெளிநாட்டு மற்றும் உள்ளூர் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து இப்பகுதி மக்களின் வாழ்வாதாரமும் பெருமளவில் உயரும்.

இன, மத, மொழிப் பாகுபாடுகளுக்கு அப்பால் அனைத்துச் சமூகங்களையும் ஒரே கண்ணோட்டத்தில் நோக்கி ஒரு சக்திவாய்ந்த அரசாங்கமாக நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல மக்கள் தொடர்ந்து தங்களது ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை சமூகத்திற்குத் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

இந் நிகழ்வுகளிலே கொடக்கவெலை பிரதேச சபை தலைவர் , பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை அதிபர் ,ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வி பணிப்பாளர்கள், அயல் பாடசாலை அதிபர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.