கொழும்பில் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது இந்தோனேசிய கலாசார மையம்!
இலங்கை மற்றும் இந்தோனேசியாவுக்கு இடையிலான கலாசாரப் பரிமாற்றத்தையும் மக்கள் தொடர்புகளையும் மேலும் வலுப்படுத்தும் நோக்கில், கொழும்பில் இந்தோனேசிய கலாசார மையம் நேற்று (12) அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இந்தோனேசியாவின் இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கான தூதுவர் திருமதி தேவி குஸ்டினா டோபிங் (Dewi Gustina Tobing) இந்தக் கலாசார மையத்தை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில், இலங்கையின் புத்தசாசனம், மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிடுமா சுனில் சேனவி பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
மேலும், மத மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முலாஃபர், அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் மற்றும் சர்வதேச இசைக் கல்லூரிக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கைக்கான தூதுவர் அதி வணக்கத்திற்குரிய அருட்கலாநிதி பிதா எஸ். சந்துரு பெர்னாண்டோ உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அத்துடன், பல்வேறு நாடுகளின் தூதுவர்கள் மற்றும் தூதரகப் பிரதிநிதிகள், பாடசாலை அதிபர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள், கலைஞர்கள் மற்றும் இலங்கையின் கலாசாரத் துறையைச் சேர்ந்த பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
இலங்கை மக்களுக்கு இந்தோனேசியாவின் செழுமையான கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் நேரடியாக அறிந்துகொள்வதற்கும் அனுபவிப்பதற்கும் ஒரு தளமாக இந்த கலாசார மையம் அமைக்கப்பட்டுள்ளது.
மையத்தில் இந்தோனேசிய நூல்கள் மற்றும் கலாசாரப் பொருட்கள் அடங்கிய நூலகம், ஜாவானீஸ் கமேலன் மற்றும் அங்க்லுங் உள்ளிட்ட பாரம்பரிய இசைக்கருவிகள், வயாங் குலித் மற்றும் வயாங் கோலேக் போன்ற பாரம்பரிய பொம்மைகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், இந்தோனேசிய பாரம்பரிய நடனங்களைப் பயில்வதற்கான வசதிகள், இந்தோனேசிய மொழிப் பயிற்சிகள் மற்றும் இந்தோனேசிய திரைப்படங்களைத் திரையிடுவதற்கான வசதிகளும் மையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதன் மூலம், இலங்கை மற்றும் இந்தோனேசிய மக்களுக்கு இடையிலான கலாசாரப் புரிந்துணர்வு, மக்கள் தொடர்பு மற்றும் இருதரப்பு உறவுகளை மேலும் ஆழப்படுத்துவதற்கான முக்கிய தளமாக இந்தோனேசிய கலாசார மையம் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

