கிழக்கு மாகாண சபையின் பலவீனத்தால் உத்தியோகத்தர்களுக்கு பெரும் பாதிப்பு

கிழக்கு மாகாண சபையின் பலவீனத்தால் உத்தியோகத்தர்களுக்கு பெரும் பாதிப்பு; – இம்ரான் எம்.பி

அபு அலா

கிழக்கு மாகாண சபையின் மற்றுமொரு பலவீனம் காரணமாக முகாமைத்துவ உத்தியோகத்தர் சேவையின் விசேட தரத்துக்கான போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த உத்தியோகத்தர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.இது தொடர்பில் (17) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,கிழக்கு மாகாண முகாமைத்துவ உத்தியோகத்தர் சேவையின் விசேட தரத்துக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்காக நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தோருக்கான நேர்முகப் பரீட்சை கடந்த வாரம் நடைபெற்றது. இந்நேர்முகப் பரீட்சையின்போது தடைதாண்டல் பரீட்சைப் பெறுபேறு சமர்ப்பிக்காததால் நேர்முகப் பரீட்சையில் கலந்து கொண்ட சிலரது முடிவுகள் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண முகாமைத்துவ சேவை ஆட்சேர்ப்புத் திட்டத்தின்படி வருடத்துக்கு இருமுறை தடைதாண்டல் பரீட்சை நடத்தப்பட வேண்டும். எனினும், மாகாணப் பொதுச் சேவை ஆணைக்குழு இந்தப் பரீட்சையை உரிய காலங்களில் நடத்த வில்லை. இந்நிலையில் மாகாணப்பொதுச் சேவை ஆணைக்குழு நடத்திய நேர்முகப் பரீட்சையில் தடைதாண்டல் பரீட்சை பெறுபேறு கேட்கப்பட்டமை தான் வேடிக்கையானது.

அவர்கள் நடத்த வேண்டிய பரீட்சையை நடத்தாமல் எப்படி அவர்கள் பெறுபேறு கேட்க முடியும்? இதனால் பாதிக்கப்படுவது கிழக்கு மாகாண அரச உயரதிகள் இல்லை. கீழ்மட்ட உத்தியோகத்தர்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள்.இந்த அரசாங்க காலத்தில் கிழக்கு மாகாண அரச நிர்வாகம் மிக மோசமாக பலவீனமடைந்துள்ளது.

இந்த மாகாணத்தின் பலவீனம் சம்பந்தமாக கடந்த வாரம் ஊடக அறிக்கையொன்றை விடுத்திருந்தேன். அந்த வகையில் இது மற்றொரு பலவீனமாகும்.

இதனால் இந்த மாகாணத்தில் பொதுமக்களும் தமது நிர்வாக விடயங்களை உரிய காலங்களில் நிறைவேற்றிக்கொள்ள முடியாது சிரமப்படுகின்றார்கள்.

இப்போது அந்த மாகாணத்தில் பணிபுரிவோரும் பாதிக்கப்படுகின்றார்கள்.

இது தான் இந்த அரசாங்கம் வாக்குறுதியளித்த சிஸ்டம் சேஞ்சா என்று கேட்க விரும்புகிறேன்.பொதுமக்களும், அரச உத்தியோகத்தர்களும் சிரமங்களை அனுபவிக்கும் வகையில் இந்த அரசாங்கம் கிழக்கு மாகாண நிர்வாகத்தை பலவீனப்படுத்தி விட்டது.

சிறந்த நிர்வாகம் செய்யக் கூடியவர்கள் இந்த அரசாங்கத்தில் இல்லையென்பதையே இது எடுத்துக் காட்டுகின்றது என்றார்.