இளைஞர்களுக்கான தேசிய கொள்கை வரைவு தொடர்பில் பொதுமக்கள் கலந்துரையாடல் பதுளையில்
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சினால், ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியத்தின் (UNFPA) ஆதரவுடன் தயாரிக்கப்பட்டுள்ள தேசிய இளைஞர் கொள்கை வரைவுக்கான பொதுமக்கள் கருத்துகள் மற்றும் முன்மொழிவுகளைப் பெறும் ஊவா மாகாண கலந்துரையாடல் நேற்று (14) பதுளை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இளைஞர் விவகார பிரதி அமைச்சர் தினிந்து சமன் ஹென்னாயக்க தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பதுளை மாநகர சபை மேயர் நந்தன ஹபுகொட உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சின் அதிகாரிகள், பதுளை மாவட்ட செயலாளர் சுனில் கலகம, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஊவா மாகாண பணிப்பாளர், தேசிய இளைஞர் படையணியின் ஊவா மாகாண பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பல அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
தேசிய இளைஞர் கொள்கையை உருவாக்கும் செயல்முறையில் இளைஞர்களின் நேரடி பங்களிப்பை உறுதி செய்யும் நோக்கில், இளைஞர் கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர் தலைவர்கள், ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட ஊவா மாகாணத்தைச் சேர்ந்த பெருமளவான இளைஞர், யுவதிகளும் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
இதன்போது, புதிய தேசிய இளைஞர் கொள்கையை மேலும் அர்த்தமுள்ளதாகவும் நடைமுறைக்கு ஏற்றதாகவும் உருவாக்குவதற்காக இளைஞர்கள் தங்களது முக்கியமான கருத்துகள் மற்றும் நடைமுறை முன்மொழிவுகளை அதிகாரிகளிடம் முன்வைத்தனர்.

