அனோஜனின் உயிரைக் காப்பாற்ற தொடர்ச்சியான இராஜதந்திர தலையீடு அவசியம் – பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன்

அனோஜனின் உயிரைக் காப்பாற்ற தொடர்ச்சியான இராஜதந்திர தலையீடு அவசியம் – பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் ஆர்.எப்.எம். சுஹெல் – நுவரெலியாசவுதி அரேபியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியான உயர்மட்ட இராஜதந்திர தலையீடுகளை மேற்கொண்டு அவரது உயிரைக் காப்பாற்றுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.மதம் தொடர்பான சமூக ஊடகப் பதிவொன்றை வெளியிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்ட அனோஜனுக்கு ஆரம்பத்தில் ஐந்து வருட சிறைத்தண்டனையும் மூன்று மில்லியன் சவுதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டிருந்ததாகவும், அந்தத் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டின் பின்னர் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அனோஜனின் சட்டத்தரணி சவுதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கு இந்த விடயம் தொடர்பில் வாய்மூலம் அறிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சும் தெரிவித்துள்ளது.எவ்வாறாயினும், மரண தண்டனை தொடர்பான உத்தியோகபூர்வ எழுத்துமூலத் தீர்ப்பின் பிரதி இதுவரை சவுதி நீதிமன்ற அதிகாரிகளிடமிருந்து இலங்கைத் தூதரகத்திற்கு கிடைக்கவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.அனோஜன் தொடர்பில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து இன்று (20) நடைபெற்ற விசேட சந்திப்பில் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன், மதம் தொடர்பில் தவறான அல்லது அவமதிப்பான கருத்தொன்றை வெளியிடுவது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்ற போதிலும், மனிதாபிமான அடிப்படையில் அவரது மரண தண்டனையை குறைப்பதற்கோ அல்லது அவருக்கு நிவாரணம் பெற்றுக் கொடுப்பதற்கோ இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளக்கூடிய அனைத்து இராஜதந்திர முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.குற்றம் ஒன்று இடம்பெற்றிருந்தால் அது தனியான சட்ட ரீதியான விடயம் எனவும், எனினும் தற்போதைய சூழ்நிலையில் மனிதாபிமான அடிப்படையில் அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்கான தேவையான தலையீடுகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.குறிப்பாக, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இந்த விடயம் தொடர்பில் தொடர்ச்சியாகத் தலையிட்டு சவுதி அதிகாரிகளுடன் உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி, அனோஜனுக்கு அதிகபட்சமான சட்ட மற்றும் மனிதாபிமான நிவாரணத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் இராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்தார்.அனோஜனின் வழக்கு தொடர்பில் ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் ஊடாக தொடர்ச்சியாகக் கண்காணித்து வருவதாகவும், கொழும்பிலுள்ள சவுதி அரேபிய தூதரகத்துடன் இணைந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் வெளிவிவகார அமைச்சு முன்னதாகத் தெரிவித்திருந்தது.அதேவேளை, அனோஜனின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் அவருக்குத் தேவையான தூதரக மற்றும் சட்ட உதவிகளை வழங்குவதற்கும் இராஜதந்திர வழிமுறைகள் ஊடாக சவுதி அதிகாரிகளுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில், அனோஜனுக்கு முன்னதாக விதிக்கப்பட்டிருந்த ஐந்து வருட சிறைத்தண்டனை மற்றும் மூன்று மில்லியன் சவுதி ரியால் அபராதத்திற்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த மேன்முறையீட்டின் பின்னரே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி ஊடாக இலங்கைத் தூதரகத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அத்தீர்ப்புக்கு எதிராக சவுதி அரேபிய உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வதற்கு ஒரு மாத கால அவகாசம் காணப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனிடையே, அனோஜனின் குடும்ப உறுப்பினர்கள் இந்த நிலைமை தொடர்பில் பெரும் கவலையடைந்துள்ளதாகவும், அவரது சட்ட நடவடிக்கைகளுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதுடன், குடும்பத்தினருக்குத் தேவையான மனிதாபிமான மற்றும் சமூக உதவிகளையும் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.அனோஜன் தொடர்பில் இலங்கை அரசாங்கமும் வெளிவிவகார அமைச்சும் இதுவரை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு தாம் நன்றியையும் பாராட்டையும் தெரிவிப்பதாகக் குறிப்பிட்ட இராதாகிருஷ்ணன், இந்த விடயத்தை தொடர்ந்து முன்னெடுத்து, சவுதி அதிகாரிகளுடன் தொடர்ச்சியான இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை நடத்தி, அனோஜனுக்கு அதிகபட்சமான சட்ட மற்றும் மனிதாபிமான நிவாரணத்தைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

manel