மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் புலமைப்பரிசில் வினாத்தாள்கள்
மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் தரம் 5 புலமைப்பரிசில் அறிவொளி இலவச முன்னோடிப் பரீட்சைக்கான வினாத்தாள் பொதிகளைக் கையளிக்கும் உத்தியோகபூர்வமான நிகழ்வு இன்று 18 ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு கொழும்பு-11 செட்டியார் தெருவில் அமைந்துள்ள மன்றத்தின் தலைமை அலுவலகத்தில் தலைவர் ஏ.சிவஞானம் தலைமையில் போஷகர்கள் முன்னிலையில் இடம்பெறும்.
சுமார் 30 ஆயிரம் மாணவர்கள் இம்முறை பயன்பெறவுள்ளமை குறிப்பிடத் தக்கது.
கொழும்பு செட்டியார் தெருவை அண்மித்துள்ள 15 பாடசாலைகளின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மன்றத்தின் முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வில் மன்றத்தின் டிஜிட்டல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாகவுள்ள எஸ். மகேஷ், பரீட்சைகள் கருத்தரங்குகள் இணைப்பாளர் வீ. ஏகாம்பரத்திடம் உத்தியோகபூர்வமாக வினாத்தாள் பொதிகளை ஒப்படைப்பார்.
நாடளாவிய ரீதியில் இம்மாதம் 26 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு ஒரே நேரத்தில் ஒரே நாளில் பரீட்சையை நடத்துவதற்கு கல்வி அதிகாரிகள், அதிபர்கள் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் தொடர்ந்து 19 ஆவது வருடமாக நடத்தும் புலமைப்பரிசில் முன்னோடிப் பரீடைக்கான வினாத் தாள்களை வலயக் கல்வி மற்றும் கோட்டக் கல்வி அலுவலங்கள் ஊடாக பெற்றுக் கொண்டு குறித்த நேரத்தில் பரீட்சையை நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

