சாதாரண தர பரீட்சைக்கான பரீட்சை அனுமதி அட்டைகள் அனுப்பிவைப்பு
நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சை விண்ணப்பதாரர்களுக்கான அனுமதி அட்டைகள் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தின் (Department of Examinations) ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர (Amit Jayasundara) தெரிவித்துள்ளார்.
இதன்படி, பாடசாலை விண்ணப்பதாரர்களுக்கான அனுமதி அட்டைகள் அவர்களின் அதிபர்களுக்கும், தனியார் விண்ணப்பதாரர்களுக்கான அனுமதி அட்டைகள் அவர்களின் முகவரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அனுமதி அட்டைகளில் , ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால் மார்ச் 10ஆம் திகதி வரை நிகழ்நிலையில் திருத்தலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், www.doenet.lk என்ற வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடைபெறவுள்ள 2025 க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை எதிர்கொள்ள உள்ளவர்களின் எண்ணிக்கை 474,147 என்பதுடன் பரீட்சைகள் மார்ச் 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை 3,663 மையங்களில் தேர்வு நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

