12 ஆண்டுகளுக்குப் பின்னர் 9 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் – பீட்று தோட்டம் மார்காஸ் பிரிவில் அடிக்கல் நாட்டும் நிகழ்வு!
2014ஆம் ஆண்டு ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் தமது லயன் குடியிருப்புகளை இழந்து, கடந்த சுமார் 12 ஆண்டுகளாகத் தற்காலிக குடியிருப்புகளில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வந்த 9 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (22) நுவரெலியா மாவட்டத்தின் பீட்று (Pedro) தோட்டம் மார்காஸ் பிரிவில் நடைபெற்றது.
களனிவெளி பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் பீட்று தோட்டத்தின் மார்காஸ் பிரிவிலேயே இந்த வீடமைப்புத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
பெருந்தோட்டப் பகுதிகளில் 10,000 வீடுகளை நிர்மாணிக்கும் இந்திய வீடமைப்புத் திட்டத்தின் ஒரு கட்டமாக, இந்திய அரசாங்கத்தின் நிதியுதவி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் பங்களிப்புடன் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீர ஆராச்சி, கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள், அமைச்சின் செயலாளர், மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர், அரச அதிகாரிகள் மற்றும் பயனாளிக் குடும்பங்கள் கலந்துகொண்டனர்.
இதன்படி, ஒவ்வொரு வீட்டிற்கும் 2.7 மில்லியன் ரூபாய் (27 இலட்சம்) செலவில் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், 9 வீடுகளுக்குமான மொத்தச் செலவு 24.3 மில்லியன் ரூபாய் (243 இலட்சம்) என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தலா 10 பேர்ச் காணியில் நிர்மாணிக்கப்படவுள்ள இவ்வீடுகளுக்கு வீதிகள், குடிநீர் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளன. அடிக்கல் நாட்டப்பட்ட வீடுகளை ஆறு மாத காலத்திற்குள் நிர்மாணித்து பயனாளிகளிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
கடந்த 2014ஆம் ஆண்டு ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் வீடுகளை இழந்த இக்குடும்பங்கள், இதுவரை நிரந்தர வீடுகளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் தற்காலிக குடியிருப்புகளில் வாழ்ந்து வந்த நிலையில், தற்போதைய வீடமைப்புத் திட்டத்தின் ஊடாக அவர்களது நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அடிக்கல் நாட்டும் நிகழ்வைத் தொடர்ந்து, அமைச்சர் உள்ளிட்ட பிரதிநிதிகள் பயனாளி ஒருவரின் தற்போதைய குடியிருப்புக்குச் சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிட்டதுடன், மக்களுடன் கலந்துரையாடி அவர்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளையும் கேட்டறிந்தனர்.
சுமார் 12 ஆண்டுகளாக நிரந்தர வீடுகளுக்காகக் காத்திருந்த 9 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளமை அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

