ஹட்டன் தனியார் பேருந்து நிலைய பொதுக் கழிப்பறையிலிருந்து மலக்கழிவு கசிவு – பயணிகள், சாரதிகள் கடும் அவதி

ஹட்டன் தனியார் பேருந்து நிலைய பொதுக் கழிப்பறையிலிருந்து மலக்கழிவு கசிவு – பயணிகள், சாரதிகள் கடும் அவதி

ஹட்டன் தனியார் பேருந்து நிலையத்திலுள்ள பொதுக் கழிப்பறைத் தொகுதியிலிருந்து மலக்கழிவுகள் கசிந்து வருவதால், அங்கு பயணிக்கும் பொதுமக்கள், பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

ஹட்டன் – டிக்கோயா நகர சபையினால் அண்மையில் புனரமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்ட இந்தக் கழிப்பறைத் தொகுதியிலிருந்தே கழிவுகள் கசிந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் பேருந்து நிலைய வளாகம் முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், குறித்த கழிப்பறை வசதியைப் பயன்படுத்த முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

தினமும் பெருமளவிலான பயணிகள் வந்து செல்லும் இந்தப் பேருந்து நிலையத்தில் ஏற்பட்டுள்ள இப்பிரச்சினையினால், நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளும் பயணிகள் மட்டுமன்றி பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

பெருந்தொகையான நிதி செலவிடப்பட்டு அண்மையில் புனரமைக்கப்பட்ட கழிப்பறைத் தொகுதியில் இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளமை குறித்து பொதுமக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். மேலும், புனரமைப்புப் பணிகள் உரிய தரநிலைகளுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்டனவா என்பது தொடர்பிலும் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

இந்த நிலைமை தொடர்ந்து நீடித்தால் பேருந்து நிலைய வளாகத்தின் சுகாதாரச் சூழல் பாதிக்கப்படுவதுடன், பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கும் ஆபத்து ஏற்படக்கூடும் எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

எனவே, இப்பிரச்சினை தொடர்பில் ஹட்டன் – டிக்கோயா நகர சபையின் பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, கழிவுகள் கசிவதைத் தடுத்து, கழிப்பறைத் தொகுதியை உரிய சுகாதாரத் தரத்திற்கு மீளமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பயணிகளும் பேருந்து ஊழியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

manel