மனைவி மீது நாயை ஏவிவிட்டு கடிக்க வைத்த கணவர் கைது!
இந்தியாவின் கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சி அருகே உள்ள ஆலங்காடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ஜோசப். இவரது மனைவி சினி (வயது55). வயதான தம்பதியான இவர்கள் தனியாக வசித்து வந்துள்ளனர். சுனில் ஜோசப் தன்னுடைய வீட்டில் “பிட்புல்” என்ற ரக நாயை வளர்த்து வருகிறார்.
அவர் அந்த நாயை வளர்ப்பதிலும், பராமரிப்பதிலும் தனது நேரத்தை செலவிட்டு வந்திருக்கிறார். இந்தநிலையில் சுனில் ஜோசப் மற்றும் அவரது மனைவி சினி ஆகியோருக்கிடையே குடும்ப தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்போது ஆத்திரமடைந்த சுனில் ஜோசப், மனைவியின் தொலைபேசியை பிடுங்கி எறிந்து உடைத்துவிட்டார்.
இது குறித்து சினி அக்கம்பக்கத்து வீட்டில் வசித்துவரும் தனது நண்பர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள், சினியின் வீட்டுக்கு வந்து அவரிடம் தகராறு செய்தது குறித்து சுனில் ஜோசப்பிடம் கேள்வி கேட்டுள்ளனர்.
அதில் ஆத்திரமடைந்த சுனில் ஜோசப், மனைவி சினியை கையால் மூக்கில் குத்தியும், தலைமுடியை பிடித்து இழுத்து சுவரில் தலையை மோதச் செய்தும் தாக்கியுள்ளார். மேலும், தான் வளர்த்து வந்த “பிட்புல்” ரக நாயை மனைவியின் மீது ஏவி விட்டார். இதையடுத்து அந்த நாய் சினியின் மீது பாய்ந்து கடித்தது. கணவர் மற்றும் நாயின் தாக்குதலில் சிக்கிய சினியின் தலை மற்றும் கையில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
தன் மீது நாயை ஏவி தாக்குதல் நடத்திய கணவரின் மீது பொலிஸில் சினி புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் விசாரணை நடத்திய பொலிஸார், சுனில் ஜோசப்பை கைது செய்தனர். அவரின் மீது 115(2)-தானாக முன்வந்து காயம் ஏற்படுத்துதல், 118(2)- கடுமையான காயம் ஏற்படுத்துதல், 126(2)-சட்டவிரோத தடுப்பு, 118(1)-விலங்கை பயன்படுத்தி காயம் ஏற்படுத்துதல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
மனைவி மீது நாயை ஏவிவிட்டு கடிக்க வைத்ததாக கைது செய்யப்பட்டுள்ள சுனில் ஜோசப், அதே நாயை பக்கத்து வீட்டுக்காரர் மீது கடந்த 2024 ஆம் ஆண்டு ஏவிவிட்டிருக்கிறார். அந்த சம்பவம் தொடர்பாக அப்போது அவரின் மீது பொலிஸார் வழக்கு பதிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

