ஜனாதிபதி செயலகத்தில் தீபாவளிக் கொண்டாட்டம்!
தேசிய ஒருமைப்பாட்டையும் மத நல்லிணக்கத்தையும் மேம்படுத்தும் ஜனாதிபதி அலுவலக நலன்புரிச் சங்கத்தின் தீபாவளிக் கொண்டாட்டம்
கோலாகலமாக நடைபெற்றது.
உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களால் கோலாகலமாகக் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விசேட கொண்டாட்ட நிகழ்வு, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் தலைமையில் கடந்த 06ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.
ஜனாதிபதி செயலக நலன்புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், இந்து சமயக் அனுஷ்டானங்கள் மற்றும் பாரம்பரியங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருந்தது.
கொழும்பு மயூரபதி இந்து கோவிலின் தலைமை குருக்கள் உட்பட ஏனைய குருக்களால் விசேட பூஜை நடத்தப்பட்டதுடன், இந்து சமயத் தலைவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பல்வேறு இந்து கோவில்களின் பூசகர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
தீபாவளிப் பண்டிகைக் கொண்டாட்டத்தை மேலும் சிறப்பிக்கும் வகையில் இந்து மற்றும் தமிழ் கலாசார கலைநிகழ்ச்சியும் நடைபெற்றது. பாரம்பரிய நடனம், இசை மற்றும் வாத்திய நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு கலாசார அம்சங்கள் இதில் இடம்பெற்றன.
விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்த ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இலங்கையில் தேசிய ஒருமைப்பாட்டையும் மத நல்லிணக்கத்தையும் மேலும் வலுப்படுத்துவதற்கு இவ்வாறான சமய மற்றும் கலாசாரக் கொண்டாட்டங்கள் பெரும் பங்களிப்பை வழங்குகின்றன எனப் குறிப்பிட்டார்.
வெவ்வேறு இனங்கள், மதங்கள் மற்றும் கலாசாரங்களைச் சேர்ந்த மக்கள் ஒருவரையொருவர் பரஸ்பரம் மதித்து, அவர்களின் சமய மற்றும் கலாசார பாரம்பரியக் கொண்டாட்டங்களில் ஒன்றாக இணைவதன் மூலம் பரஸ்பர புரிதல், நட்பு மற்றும் நம்பிக்கை வளர்கிறது என்றும் ஜனாதிபதியின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
அரச நிறுவனங்களுக்குள் அனைவருக்கும் சமமான மரியாதையும், அங்கீகாரமும், உரிமையும் உறுதி செய்யப்படும் சூழலை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், இவ்வாறான திட்டங்களைத் தொடர்ச்சியாக ஏற்பாடு செய்வதற்கு ஜனாதிபதி செயலக நலன்புரிச் சங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளையும் பாராட்டினார். இந்த விசேட கொண்டாட்ட நிகழ்வை வெற்றிகரமாக நடத்துவதற்காக நிதி உதவி மற்றும் பல்வேறு வழிகளில் ஆதரவு வழங்கிய இந்து வர்த்தக சமூகம், கொழும்பு இந்து வர்த்தக சங்கங்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அனைத்து நன்கொடையாளர்களுக்கும் ஜனாதிபதியின் செயலாளர் தனது விசேட நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
இந்நிகழ்வின் வரவேற்புரையை ஜனாதிபதி செயலக நலன்புரிச் சங்கத்தின் செயலாளரும் ஜனாதிபதியின் உதவிச் செயலாளருமான சட்டத்தரணி சமித் தலக்கிரியாவ நிகழ்த்தினார்.
பாராளுமன்ற உறுப்பினர்களான கிட்ணன் செல்வராஜ், கே. இளங்குமரன். ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி சட்டத்தரணி பிரபாத் சந்திரகீர்த்தி, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர்களான ரோஷன் கமகே, ரஸல் அபோன்சு, ஜனாதிபதியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி ஜே.எம். விஜயபண்டார உள்ளிட்ட ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், இராஜதந்திர பிரதிநிதிகள், அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள், அழைக்கப்பட்ட விருந்தினர்கள், ஜனாதிபதி செயலகப் பணியாளர்கள் மற்றும் இந்நிகழ்ச்சிக்கு நிதியுதவி மற்றும்v ஏனைய அனுசரணைகளை வழங்கிய கொழும்பு இந்து வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

