தவணைக் கொடுப்பனவு பிரச்சினை : வாகனத்தை எடுத்துச் சென்றதாகக் கூறப்படும் ஒருவர் கைது!

தவணைக் கொடுப்பனவு பிரச்சினை : வாகனத்தை எடுத்துச் சென்றதாகக் கூறப்படும் ஒருவர் கைது!

வேன் வாகனத்துடன் சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்; மற்றைய சந்தேகநபரைத் தேடும் நடவடிக்கை முன்னெடுப்பு

நுவரெலியா பிளாக்பூல் பகுதியில் வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் வாகனத்தை உரிமையாளரின் அனுமதியின்றி எடுத்துச் சென்றதாகக் கூறப்படும் இருவரில் ஒருவர் இன்று (31) நானுஓயா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வேன் வாகனத்தை இருவர் எடுத்துச் செல்வதாகக் கிடைத்த தகவலையடுத்து, வாகன உரிமையாளரின் உறவினர்களும் அறிமுகமானவர்களும் அதனைப் பின்தொடர்ந்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து, நுவரெலியா–ஹட்டன் பிரதான வீதியின் பார்ம்ஸ்டன் பகுதியில் வேன் வாகனத்துடன் ஒருவரைக் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வேன் வாகனத்தின் உரிமையாளரான மொஹமட் அஷ்ரப் தெரிவிக்கையில், தனது வீட்டிற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தை இருவர் எடுத்துச் செல்வதாக அறிமுகமான ஒருவர் தொலைபேசி மூலம் அறிவித்ததாகவும், அதனையடுத்து வாகனத்தைப் பின்தொடர்ந்து பொலிஸாருக்கு அறிவித்ததாகவும் தெரிவித்தார்.

மேலும், வாகனத்தை மீளக் கைப்பற்றுவது தொடர்பில் லீசிங் நிறுவனத்திடமிருந்து தமக்கு எவ்வித அறிவித்தலும் வழங்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதம பொலிஸ் பரிசோதகர் எச்.ஜே.கே.என். விஜேராம தெரிவிக்கையில், வாகனத் தவணைக் கொடுப்பனவுகள் செலுத்தப்படாமை காரணமாக அதனை மீளக் கைப்பற்றுவது தொடர்பில் முந்தைய தினம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததாகக் கூறினார்.

வாகன உரிமையாளருடன் கலந்துரையாடி, சட்ட நடைமுறைகளுக்கு அமைவாகவே வாகனத்தை மீளப் பெறுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

உரிமையாளருக்கு அறிவிக்காமல் வாகனத்தின் பூட்டுகளை உடைத்தோ அல்லது வேறு வழியிலோ வாகனத்தை எடுத்துச் செல்வது சட்டரீதியான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேலும் குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வேன் வாகனத்துடன் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும், சம்பவத்துடன் தொடர்புடைய மற்றைய சந்தேகநபரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வாகனத் தவணைக் கொடுப்பனவுகள் செலுத்தப்படாத சந்தர்ப்பங்களில் வாகனத்தை மீளக் கைப்பற்றுவதற்கான உரிமை, சம்பந்தப்பட்ட நிதி ஒப்பந்தத்தின் தன்மை மற்றும் நடைமுறையிலுள்ள சட்ட ஏற்பாடுகளைப் பொறுத்ததாகும். 2000 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க நிதி குத்தகைச் சட்டம் பொருந்தும் ஒப்பந்தங்களில், அதில் குறிப்பிடப்பட்டுள்ள சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருப்பது மாத்திரம் வாகனத்தைப் பலவந்தமாகக் கைப்பற்றுவதற்கான சட்ட அனுமதியாக அமையாது. இச்சம்பவத்தில் சட்டவிரோதச் செயல் இடம்பெற்றுள்ளதா என்பது பொலிஸ் விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.

manel