பூச்சிக்கொல்லி நச்சுத் தாக்கத்திலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்க தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்
இலங்கையில் BASF Sanrakshan பாதுகாப்பு உபகரணத் தொகுப்பு அறிமுகம் – 4,500 விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கத் திட்டம்
பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தும்போது விவசாயிகள் எதிர்கொள்ளும் சுகாதார அபாயங்களைக் குறைத்து, அவர்களின் உயிர் மற்றும் தொழில்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், BASF Sanrakshan பாதுகாப்பு உபகரணத் தொகுப்பை இலங்கையில் அறிமுகப்படுத்தும் தேசிய வேலைத்திட்டம், விவசாயப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் துஷார விக்ரமாரச்சி தலைமையில் ஒக்டோபர் 28ஆம் திகதி மாலை நுவரெலியாவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பூச்சிக்கொல்லிகளை உரிய பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாமல் பயன்படுத்துவதால் விவசாயிகள் நச்சுத் தாக்கம், பல்வேறு நோய்கள் மற்றும் உயிருக்கு ஆபத்தான சுகாதாரப் பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடலாம். இதனைத் தடுப்பதற்காக உரிய பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுவதன் அவசியம் இந்நிகழ்ச்சியின்போது வலியுறுத்தப்பட்டது.
இதனையொட்டி, பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தும்போது விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் தொடர்பான விழிப்புணர்வு உரையையும் விவசாயப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் துஷார விக்ரமாரச்சி நிகழ்த்தினார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த அவர், பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தும் போது விவசாயிகள் தமது உடல்நலம் மற்றும் பாதுகாப்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டார். உரிய பாதுகாப்பு நடைமுறைகள் இன்றி இவற்றைப் பயன்படுத்துவதால் நச்சுப் பொருட்கள் உடலுக்குள் செல்வதுடன், பல்வேறு நோய்கள் ஏற்படவும் உயிருக்கு ஆபத்து உருவாகவும் வாய்ப்புள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, தரமான பாதுகாப்பு ஆடைகளை அணிதல், பூச்சிக்கொல்லி தயாரிப்புகளின் லேபிள்களில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைச் சரியாகப் பின்பற்றுதல் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடித்தல் ஆகியவை அத்தியாவசியமானவை என்றும் அவர் வலியுறுத்தினார்.
விவசாயிகளின் பாதுகாப்பு என்பது அவர்களது தனிப்பட்ட உடல்நலத்துடன் மாத்திரம் தொடர்புடையதல்ல எனவும், பூச்சிக்கொல்லிகளால் மாசடைந்த ஆடைகள் மற்றும் உபகரணங்களை முறையாகச் சுத்தம் செய்தல், இரசாயனப் பொருட்களை சிறுவர்களுக்கு எட்டாத பாதுகாப்பான இடங்களில் சேமித்தல், அவற்றை உணவு மற்றும் பானங்களிலிருந்து தனியாக வைத்திருத்தல் ஆகியவற்றின் மூலம் குடும்ப உறுப்பினர்களையும் பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் விளக்கினார்.
மேலும், பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்திய பின்னர் கைகளையும் உடலின் வெளிப்பட்ட பகுதிகளையும் நன்கு கழுவுதல், பயன்படுத்திய ஆடைகளைத் தனியாகத் துவைத்தல் மற்றும் இரசாயனப் பொருட்கள் நீர்நிலைகளில் கலப்பதைத் தடுத்தல் போன்ற நடவடிக்கைகள் விவசாயிகள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் சுற்றுச்சூழலின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உதவும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை விவசாயிகளுக்குத் தரம் உறுதிப்படுத்தப்பட்ட பாதுகாப்பு உபகரணத் தொகுப்புகளை இறக்குமதி செய்து விநியோகிக்க வேண்டிய தேவை காணப்பட்டபோதிலும், அதற்கான முன்முயற்சியை மேற்கொள்ள எந்தவொரு நிறுவனமும் முன்வராத நிலையில், BASF நிறுவனம் முன்னின்று விவசாயத் திணைக்களத்துடன் இணைந்து இவ்வுபகரணத் தொகுப்புகளை நாட்டிற்கு இறக்குமதி செய்து விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இந்நிகழ்வில் உரையாற்றிய BASF லங்கா நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அஜித் விக்ரமசேகர, நிறுவனத்தின் அனுசரணையுடன் நாடளாவிய ரீதியில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், 4,500 விவசாயிகளுக்கு இந்தப் பாதுகாப்பு உபகரணத் தொகுப்புகளை இலவசமாக வழங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
நுவரெலியாவில் நடைபெற்ற இந்த ஆரம்ப நிகழ்வில் விவசாயத் திணைக்களத்தின் மேலதிகப் பணிப்பாளர் நாயகம் (ஆராய்ச்சி) டாக்டர் ஜே.ஏ. சுமித், மத்திய மாகாண விவசாயப் பணிப்பாளர் ஜயலத் பண்டார, விவசாயப் பிரதிப் பணிப்பாளர் ரங்கன சந்திரசிறி, நுவரெலியா சீதாஎலிய ஆராய்ச்சி நிலையத்தின் பிரதம பணிப்பாளர் டாக்டர் அபயதிலகரத்ன, விவசாய அபிவிருத்தி பிரதி ஆணையாளர் ஸ்ரீநாத் ரூபசிங்க, பூச்சிக்கொல்லி அலுவலகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய உதவிப் பணிப்பாளர் மொஹான் ஹதுருசிங்க, BASF லங்கா நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அஜித் விக்ரமசேகர, முகாமையாளர் சந்தரேகா ரூபசிங்க மற்றும் விளம்பர முகாமையாளர் எரங்க குணவர்தன உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் சுமார் 180 பயனாளி விவசாயிகளும் பங்கேற்றிருந்தனர்.

