அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் 13 இலட்சத்துக்கும் அதிகமானோர் நீக்கம்!
- புதிய தெரிவு முறையின் கீழ் 9,91,800 பேர் தகுதி
– மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை நவம்பர் 11 வரை சமர்ப்பிக்கலாம்
நலன்புரி நன்மைகள் சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளர்களைத் தெரிவு செய்யும் புதிய முறையின் கீழ், 13 இலட்சத்து 91 ஆயிரத்து 830 பேர் பயனாளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
2025 டிசம்பர் 15ஆம் திகதியிடப்பட்ட 2497/03 இலக்க அரச வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய, இனிவரும் காலங்களில் ‘அஸ்வெசும’ திட்டத்தின் கீழ் ‘அதி வறியோர்’ மற்றும் ‘வறியோர்’ ஆகிய இரண்டு பிரிவுகளுக்கு மாத்திரமே நிதியுதவிகள் வழங்கப்படவுள்ளன.
தகவல்களைப் புதுப்பித்த பின்னர் வெளியிடப்பட்ட முதற்கட்டப் பட்டியலின்படி, மாதாந்தம் ரூ. 17,500 கொடுப்பனவைப் பெறும் ‘அதி வறியோர்’ பிரிவில் 363,142 பேரும், மாதாந்தம் ரூ. 10,000 கொடுப்பனவைப் பெறும் ‘வறியோர்’ பிரிவில் 628,658 பேரும் தகுதி பெற்றுள்ளனர்.
இதன்படி, முதற்கட்டப் பட்டியலில் மொத்தம் 991,800 பேர் தகுதி பெற்றுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படவுள்ள இரண்டாவது பயனாளர் பட்டியலுக்காக சுமார் 740,127 குடும்பங்கள் மாத்திரம் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும் சபை குறிப்பிட்டுள்ளது.
தற்போதைய தகுதிபெற்ற பயனாளர்களின் பெயர்ப்பட்டியல் அனைத்து பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம அலுவலர் அலுவலகங்களின் அறிவித்தல் பலகைகளிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியல் தொடர்பில் ஏதேனும் மேன்முறையீடுகள் அல்லது ஆட்சேபனைகள் இருப்பின், இன்று (29) முதல் நவம்பர் 11ஆம் திகதி வரை அவற்றைச் சமர்ப்பிக்க பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தகவல்களைப் புதுப்பிக்கும் செயற்பாடுகள் நிறைவடைந்த பின்னர், தகுதிபெறும் புதிய பயனாளர்களை உள்ளடக்கிய இரண்டாவது பெயர்ப்பட்டியலை எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் வெளியிட நலன்புரி நன்மைகள் சபை எதிர்பார்த்துள்ளது.

