நாய்கள் பதிவு தொடர்பான சட்டமூலத்துக்கு துறைசார் மேற்பார்வைக் குழு அனுமதி!
விசர்நாய்கடி நோயை (Rabies) ஒழித்தல் மற்றும் நாய்களைப் பதிவு செய்தல் தொடர்பான சட்டமூலத்துக்கு, சில திருத்தங்களுக்கு உட்பட்டு, பொது நிர்வாகம், நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அனுமதி கிடைத்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக தலைமையில் கடந்த 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் கூடிய குழுக்கூட்டத்தின் போதே இந்த சட்டமூலத்தின் ஏற்பாடுகள் மற்றும் யோசனைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
நாய்களுக்கு விசர்நாய்கடி நோய் தடுப்பூசிகளை வழங்குதல், நாய் தொகையைக் கட்டுப்படுத்துதல் மற்றும் வர்த்தக நோக்கங்களுக்காக நாய்களை இனப்பெருக்கம் செய்வதை ஒழுங்குமுறைப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் நாட்டிலிருந்து வெறிநாய்கடி நோயை முற்றாக ஒழிப்பதே இந்தச் சட்டமூலத்தின் முக்கிய நோக்கமாகும்.
அத்துடன் நாய்களைப் பதிவு செய்வதைச் சீரமைத்தல், வெறிநாய் நோயை ஒழிப்பதற்காக தேசிய மற்றும் பிரதேச ஆலோசனைக் குழுக்களை நிறுவுதல் மற்றும் தற்போது அமுலிலுள்ள வெறிநாய்கடி நோய் பற்றிய கட்டளைச் சட்டம் மற்றும் நாய்கள் பதிவு பற்றிய கட்டளைச் சட்டம் என்பவற்றுக்கு பதிலாக புதிய சட்ட கட்டமைப்பை அறிமுகப்படுத்துவதும் இதில் அடங்கும்.
இந்தச் சட்டமூலம் தொடர்பான கலந்துரையாடலின் போது, நாய்களுக்கு முதலாம் கட்ட விசர்நாய்க்கடி நோய் தடுப்பூசி வழங்கப்பட வேண்டிய வயது எல்லை தொடர்பில் காணப்படும் முரண்பாடுகளை நீக்குவதன் அவசியம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
அதேபோல, வீதியோர நாய்களுக்கு தன்னார்வத்துடன் உணவளிக்கும், பராமரிக்கும் அல்லது சிகிச்சைகளுக்கு உதவும் நபர்களை, அந்தச் செயலின் காரணமாகவே அந்த நாய்களின் சட்டப்பூர்வ உரிமையாளர்களாகக் கருதுவதையோ அல்லது உரிமையாளர்களுக்குரிய அனைத்துப் பொறுப்புகளையும் அவர்கள் மீது சுமத்துவதையோ தடுப்பதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளைத் தெளிவுபடுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மேலும், நாய்களை மலடாக்கும் அறுவை சிகிச்சைகளை கால்நடை வைத்தியர்களின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்வதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டதுடன், ஹோர்மோன் ஊசிகள் உள்ளிட்ட மாற்று முறைகளில் உள்ள சிக்கல்களைக் கருத்தில் கொண்டு விலங்கு நலனை உறுதிப்படுத்தும் வகையில் உரிய ஏற்பாடுகளை தயாரிப்பதன் அவசியமும் சுட்டிக்காட்டப்பட்டது.
இதனைத் தவிர, நாய்களைப் பதிவு செய்யும் முறையை ஒழுங்குமுறைப்படுத்துதல், பதிவுகளை மேற்கொள்ளத் தவறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகைகளைத் திருத்துதல் மற்றும் வர்த்தக ரீதியிலான இனப்பெருக்க மையங்களை முறைப்படுத்துவதைப் பலப்படுத்துதல் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
விலங்கு வன்கொடுமைகளைத் தடுப்பதற்கான அபராதங்கள் மற்றும் தண்டனைகளைத் திருத்துதல், விசர்நாய்கடி நோய் தொற்றியிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் நாய்களைக் அவதானிக்கும் போது முறையான நடைமுறையைப் பின்பற்றுதல் மற்றும் கால்நடை மருத்துவப் பரிசோதனைகளின் அடிப்படையில் தீர்மானங்களை எடுப்பதன் முக்கியத்துவம் குறித்தும் ஆராயப்பட்டது.
அத்துடன், விசர்நாய்கடி நோயை ஒழிப்பதற்காக அமைக்கப்படவுள்ள தேசிய மற்றும் பிரதேச ஆலோசனைக் குழுக்களின் கட்டமைப்பு, பொறுப்புகள் மற்றும் நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு குறித்தும் இந்தக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

