2 மாதங்களில் சிறைகளில் இருந்த 5000 பேர் விடுவிப்பு

2 மாதங்களில் சிறைகளில் இருந்த 5000 பேர் விடுவிப்பு

சிறைச்சாலைகளில் காணப்படும் நெருக்கடியைக் குறைப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விளைவாக, சிறைச்சாலையிலுள்ள கைதிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்ககார தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை 01 ஆம் திகதி நிலவரப்படி சிறைச்சாலைகளில் 41,993 ஆகக் காணப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை, செப்டம்பர் 30 ஆம் திகதியளவில் 36,925 ஆகக் குறைந்துள்ளதாகத் தரவுகளை வெளிப்படுத்தி அமைச்சர் விளக்கமளித்தார்.

இன்று (22) பாராளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றான அரசாங்க பகுப்பாய்வாளர் அறிக்கைகள் வெளியீட்டிலுள்ள தாமதத்தைத் தவிர்ப்பதற்காக, அரசாங்கம் குறித்த திணைக்களத்தின் வெற்றிடங்களை நிரப்பி, ஊழியர் படையைப் பலப்படுத்தி அப்பணிகளைப் பெருமளவில் துரிதப்படுத்தியதாகவும், உதாரணமாக ஓகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மட்டும் 1,506 அரசாங்க பகுப்பாய்வாளர் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், வரவிருக்கும் சட்டத் திருத்தங்களின் கீழ் அரசாங்க பகுப்பாய்வாளரிடம் பொருட்கள் ஒப்படைக்கப்பட்ட பிறகு இரண்டு மாதங்களுக்குள் அது தொடர்பான அறிக்கையை வழங்க வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

வழக்கு முடிவடையும் வரை போதைப்பொருள் பொதியை முழுமையாகத் தடுத்து வைப்பதற்குப் பதிலாக, அவற்றின் புகைப்படங்கள் மற்றும் தேவைப்படின் காணொளிகளை எடுத்து நீதவானுக்கு அறிவித்து, நீதிமன்றக் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அவற்றை விரைவாக அழிப்பதற்கு நீதவானுக்கு அதிகாரம் வழங்கப்படவுள்ளது.

இந்தச் செயல்பாட்டின் போது குற்றம் சாட்டப்பட்டவர் அல்லது சந்தேகநபரின் அடிப்படை உரிமைகளுக்கோ அல்லது நியாயமான விசாரணைக்கான உரிமைக்கோ எவ்வித பாதகமும் ஏற்படாத வகையில், சட்டப்பூர்வமாக இந்நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குச் சட்டத் திருத்தங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

manel