தமிழ் மக்களுக்கு சட்டரீதியாக வழங்கப்பட்ட உரிமைகளை மகாவலி அதிகார சபை மீறுகிறது

தமிழ் மக்களுக்கு சட்டரீதியாக வழங்கப்பட்ட உரிமைகளை மகாவலி அதிகார சபை மீறுகிறது!மட்டு.
துஷாரா மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் வரும் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் B வலயம் ஊடாக பொலனருவையில் உள்ள சிங்கள மக்களுக்கே 88 வீத காணிகள் வழங்கப்பட்டுள்ளன என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் அமரர் சம்பந்தன் 2021 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் புள்ளி விபரங்களுடன் பதிவு செய்துள்ளார் என்று ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் செ.நிலாந்தன் தெரிவித்தார்.
இன விகிதாச்சாரத்திற்கு முன்னுரிமை மற்றும் மாவட்ட மாகாண குடிப்பரம்பலை மாற்றும் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளக்கூடாது போன்ற சட்ட ஏற்பாடுகளுக்கு ஏற்ப மட்டக்களப்பில் மகாவலி B வலயத்திற்கு உட்பட்ட மீதமுள்ள காணிகளை தமிழ் மக்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஏறாவூர் பற்று பிரதேச சபையின் 17 வது அமர்வில் ஈரளக்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை நிலங்களை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கு வழங்கியதுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,மகாவலி அதிகார சபை சட்டம் மற்றும் அரசியலமைப்பின் 13 வது திருத்தச் சட்டத்தின் இணைப்பு இரண்டின் பிரிவு இரண்டில் சொல்லப்பட்டஇன விகிதாச்சாரத்திற்கு முன்னுரிமை மற்றும் மாவட்ட மாகாண குடிப்பரம்பலை மாற்றும் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளக்கூடாது.
சட்ட ஏற்பாடுகளுக்கு எதிராக மகாவலி அதிகார சபை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள எல்லை பிரதேசமான மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பகுதிகளில் பெரும்பான்மை இன சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கு விவசாயம் செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கையில் மகாவலி அதிகார சபை பத்து வலயங்களை உள்ளடக்கி தனது அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இதில் மட்டக்களப்பு மாவட்டம் மகாவலி B வலயத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ளது.
மகாவலி B வலயம் இரண்டு மாவட்டங்களையும் மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளையும் உள்ளடக்குகின்றது.
வடமத்திய மாகாணம் பொலன்னறுவை வெலிகந்தை (Welikanda), வடமத்திய மாகாணம் பொலன்னறுவை திம்புலாகலை (Dimbulagala), கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு கோறளைப்பற்று வடக்கு வாகரை ஆகியவை அடங்கும்.இதில் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவு உள்ளடக்கிய மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பகுதிகளை உள்ளடக்கிய சுமார் 12 ஆயிரம் ஏக்கர் காணிகள் காணப்படுகிறது.
மட்டக்களப்பு, பொலனறுவை என இரண்டு மாவட்டங்களையும் இணைத்து இடதுகரை வலது கரை என அடையாளப் படுத்தப்பட்ட மகாவலி B வலயத்தின் மொத்தப் பரப்பளவு சுமார் 186,420 ஏக்கர் காணிகள் உள்ளது.
இன் நிலையில் மகாவலி அபிவிருத்தித் திணைக்களத்தின் B வலயம் ஊடாக இடது கரை பக்கத்தில் உள்ள பொலனறுவை சிங்கள மக்களுக்கு 88 வீதம் காணிகளை மகாவலி அதிகார சபை ஏற்கனவே வழங்கி உள்ளது என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் அமரர் சம்பந்தன் கடந்த 2021 ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் புள்ளி விபரங்களுடன் பதிவு செய்துள்ளார். அத்துடன் மகாவலி B வலயத்தில் உள்ள மீதமுள்ள காணிகளை தமிழ், முஸ்லீம் மக்களுக்கே வழங்கப்பட வேண்டும் என அவர் அப்போதே வலியுறுத்தி உள்ளார்.
ஆனால் இன்று வரை மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் நிலங்களை தர மகாவலி அபிவிருத்தித் திணைக்களம் மறுப்பு தெரிவித்து வருகிறுது.மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை காணிகளை உள்ளடக்கிய சுமார் 12,000 ஏக்கர் காணிகள் மகாவலி B வலயத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ளன.
இந்த பகுதிகளுக்குள் தான் காலம் காலமாக மட்டக்களப்பு மாவட்ட பண்ணையாளர்கள் தங்களது கால்நடைகளை கொண்டு மேய்த்து வருகின்றனர்.ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸாநாயக்க அவர்களின் பணிப்புரைக்கு அமைய கடந்த மே மாதம் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரைக்காக சுமார் 1,570 ஏக்கர் காணிகளை மகாவலி ஒதுக்கீடு செய்வதாக தெரிவித்து இன்று வரை எதுவுமே நடக்கவில்லை.
ஆனால் மீண்டும் அந்த பகுதிகளை அத்துமீறிய சிங்கள குடியேற்றவாசிகள் விவசாயம் செய்வதற்கு மகாவலி அபிவிருத்தி அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது.இலங்கையில் சட்டரீதியாக தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை மீறி செயற்படுகிறது. அத்துடன் தமிழ் மக்களின் காணிகளை ஆக்கிரமித்து சிங்கள சட்டவிரோத குடியேற்றங்களுக்கு மகாவலி அபிவிருத்தித் அதிகார சபை துணைபோகிறது.
13வது திருத்தத்தின் இணைப்பு II காணி மற்றும் காணிக் குடியேற்றம் (Land and Land Settlement) தொடர்பாகதெளிவாக கூறப்பட்டுள்ளது.மகாவலி திட்டம் பல மாகாணங்களை உள்ளடக்கிய அபிவிருத்தித் திட்டமாக இருந்தாலும், காணிகளை வழங்குவது தொடர்பாக அரசியலமைப்பின் இணைப்பு II-இல் தேசிய இன விகிதாச்சாரத்திற்கு முன்னுரிமை மற்றும் மாவட்ட மாகாண குடிப்பரம்பலை மாற்றும் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ள கூடாது என கூறப்பட்டுள்ளது.
மகாவலி சட்டத்தின்படி காணிகளை எவ்வாறு வழங்க வேண்டுமென 1979 ஆம் ஆண்டின் 23ஆம் இலக்க மகாவலி அதிகாரசபைச் சட்டம் பிரிவு 13 இல் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.
இதில் இன விகிதாச்சாரம் எவ்வாறு பேணப்பட வேண்டும் என்பது மிக முக்கியமாக 13வது அரசியலமைப்புத் திருத்தத்தின் இணைப்பு II, பிரிவு 2 இல் கூறப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் இணைப்பு இரண்டில் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது.
அதாவது பிரிவு 2.5 இல் தேசிய இன விகிதாச்சாரத்தின் அடிப்படையில் மகாவலி அபிவிருத்தித் திட்டங்களில் காணி ஒதுக்கீடுகள் வழங்கப்பட வேண்டும். அடுத்ததாக, திட்டம் அமைந்துள்ள மாவட்டத்தின் காணியற்றவர்கள்; அதன் பின்னர், அந்த மாகாணத்தின் காணியற்றவர்கள் என முன்னுரிமை வரிசையில் காணிகள் வழங்கப்பட வேண்டும்.
பிரிவு 2.6 இல் பயன்படுத்தப்படாத ஒதுக்கீடு மற்றும் ஒரு சமூகத்தினர் தங்களுக்குரிய ஒதுக்கீட்டைப் பெறாவிட்டால் அல்லது பெற முடியாவிட்டால், வேறு மாகாணங்களுக்கிடையிலான நீர்ப்பாசனம் அல்லது காணி அபிவிருத்தித் திட்டத்தில் அதற்குச் சமமான ஒதுக்கீட்டைப் பெறுவதற்கான ஏற்பாடுகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரிவு 2.7 இல் முடிந்தவரை, காணி ஒதுக்கீடுகள் மாகாணத்தின் குடிப்பரம்பலில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தாத வகையிலும், குடியேற்றங்களில் சமூக ஒற்றுமையை உறுதிப்படுத்தும் வகையிலும் மேற்கொள்ளப்பட வேண்டும் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தம், இணைப்பு II இல் உள்ள பிரிவுகள் 2.5 தொடக்கம் 2.8 வரை கூறப்பட்டுள்ள சட்ட ஒழுங்குகளை மீறியே மகாவலி அபிவிருத்தித் அதிகார சபை உத்தியோகத்தர்கள் செயற்பட்டு வருகின்றனர்.இதுவரை தேசிய ரீதியாக மகாவலி அதிகார சபை ஊடாக வழங்கப்பட்டதாக கூறப்படும் காணிகளை தேசிய இன விகிதாசார அடிப்படையில் ஆராய்ந்த போது தமிழ் மக்களை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை எவ்வாறு புறக்கணித்துள்ளது என்பது தெளிவாக தெரிகிறது.
அதாவது காணி ஒதுக்கீட்டின் சதவீதத்தின் படி சிங்கள மக்களுக்கு 96.16 வீதம் காணிகளும், முஸ்லிம் மக்களுக்கு 2.39 வீதம் காணிகளும், தமிழ் மக்களுக்கு 1.42 வீதம் காணிகளும், பறங்கிய சமூகத்தினருக்கு 0.03 வீதம் காணிகளும் வழங்கப்பட்டுள்ளன.
இதில் மிக கூடுதலாக தமிழ் மக்களே புறக்கணிக்கப்பட்டுள்ளனர். 2011ம் ஆண்டு அக்டோபர் 21ம் திகதி நாடாளுமன்ற விவாதத்தில், அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் ஆர்.
சம்பந்தன் மகாவலி B வலயத்தின் இடதுகரைப் பகுதியில், பொலன்னறுவை மாவட்டத்தில், பெரும்பான்மை சமூகத்தினருக்கு 88% காணிகள் வழங்கப்பட்டு விட்டன இந்த சதவீதங்களை அவர் மகாவலி அதிகாரசபையின் புள்ளிவிவரங்களில் இருந்து எடுத்து கூறியதோடு மீதமுள்ள 12 வீத காணிகள் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால் அது இன்று வரை நிறைவேற்றப்படவில்லை என தெரிவித்தார்.

