முதியோர்களுக்கான இலவசக் கண் பரிசோதனை முகாம்

சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு ஹோல்புறூக்கில் கண் பரிசோதனை முகாம்!
100 முதியோர்களுக்கு கண் பரிசோதனை எதிர்வரும் நவம்பரில் மூக்குக் கண்ணாடிகள் வழங்க ஏற்பாடுசர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு, தலவாக்கலை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான இலவசக் கண் பரிசோதனை முகாம் இன்று (16) ஹோல்புறூக் பௌத்த விகாரையில் நடைபெற்றது.
ஹோல்புறூக் 475 J மற்றும் பெல்மோரல் 476 Q ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச் சேர்ந்த 100 முதியோர்கள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கான கண் பார்வைப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.ஹோல்புறூக் கிராம உத்தியோகத்தர் ஆர். குழந்தைவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தலவாக்கலை பிரதேச செயலகத்தின் உதவிச் செயலாளர், முதியோர் அபிவிருத்திப் பணிகளுக்குப் பொறுப்பான திருமதி மல்லிகா, திருமதி புளோரா, அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, வைத்திய அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது, முதியோர்களின் கண் பார்வை தொடர்பான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், பரிசோதனைகளின் அடிப்படையில் தேவையுடையவர்களுக்கு மூக்குக் கண்ணாடிகள் எதிர்வரும் நவம்பர் மாதம் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
முதியோர்களின் உடல்நலத்தைப் பாதுகாத்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்நடவடிக்கை, முதியோர்களின் நலனில் சமூகமும் அரச நிறுவனங்களும் அக்கறை செலுத்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது.

