‘ஸ்ரீலங்கா ரத்னா’ மோடியின் நட்பைப் பயன்படுத்தி அனோஜனை காப்பாற்றுங்கள்: ஜனாதிபதியிடம் எம்பி மனோ கணேசன் வலியுறுத்தல்! 

‘ஸ்ரீலங்கா ரத்னா’ மோடியின் நட்பைப் பயன்படுத்தி அனோஜனை காப்பாற்றுங்கள்: ஜனாதிபதியிடம் எம்பி மனோ கணேசன் வலியுறுத்தல்! 

சவுதி அரேபியாவில் மரண தண்டனை அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள இலங்கை இளைஞர் அனோஜன் சிவராசாவின் விவகாரத்தில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உயர்மட்ட ராஜதந்திர உதவியை நாடுமாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் (TPA) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் (X) தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ள மனோ கணேசன் எம்பி, இலங்கையின் நெருங்கிய நண்பரான இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, இலங்கையின் உயரிய விருதான “ஸ்ரீலங்கா ரத்னா” வழங்கி கௌரவிக்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் தனது பதிவில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது:

“அனோஜன் எதிர்கொண்டுள்ள மிகத் துயரமான நிலைமை குறித்து, இலங்கையின் நெருங்கிய நண்பரும் ‘ஸ்ரீலங்கா ரத்னா’ விருதை பெற்றவருமான இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அவசர கவனத்திற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கொண்டு செல்ல வேண்டும்.

சவுதி அரேபிய இளவரசரும் பிரதமருமான மொஹம்மத் பின் சல்மானுடன் பிரதமர் மோடி மிக நெருங்கிய நல்லுறவைக் கொண்டுள்ளார். எனவே, இந்தத் தனிப்பட்ட நட்பைப் பயன்படுத்தி, மனிதாபிமான அடிப்படையில் அனோஜனுக்கு ஒரு நல்வாழ்வுத் தீர்வை பெற்றுத்தர சவுதி இளவரசருடன் பேசுமாறு பிரதமர் மோடியிடம் இலங்கை அரசு கோரிக்கை விடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியாவில் சமூக வலைத்தளப் பதிவு தொடர்பாகக் கைது செய்யப்பட்டு மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ளதாகக் கூறப்படும் அனோஜனை காப்பாற்ற, சர்வதேச அளவிலான ராஜதந்திர அழுத்தங்களும் மனிதாபிமான முயற்சிகளும் அவசியம் என்ற பின்னணியிலேயே மனோ கணேசன் எம்பி கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

manel