அஸ்வெசும நிதி மோசடி குற்றவாளிகளை தப்பிக்க இடமளிக்க மாட்டோம்!

அஸ்வெசும நிதி மோசடி குற்றவாளிகளை தப்பிக்க இடமளிக்க மாட்டோம்!


நோர்வூட் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ‘அஸ்வஸும’ சமூக நலன்புரித் திட்ட நிதியில் இடம்பெற்றுள்ள பாரிய நிதி முறைகேடுகள், முறையற்ற பயனாளர் தேர்வு மற்றும் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து முன்னெடுக்கப்பட்ட நிதிச் சூறையாடல்கள் தொடர்பாகத் தனது வன்மையான கண்டனத்தைப் பதிவுசெய்வதாக நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர் கணேசன் இளையராஜா தெரிவித்துள்ளார்.

​இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விரிவான ஊடக அறிக்கையில்
​”அன்றாடக் கூலித் தொழில் செய்து, கடுமையான வறுமையிலும் வாழ்வாதார நெருக்கடியிலும் தவிக்கும் ஏழை எளிய மக்களின் வயிற்றிலடிக்கும் வகையிலேயே நோர்வூட் பிரதேச செயலகத்தில் இந்த ‘அஸ்வஸும’ நிதி ஊழல் அரங்கேறியுள்ளது. வறுமைக் கோட்டிற்குப் கீழ் வாழும் மக்களுக்கு அரசு வழங்கும் சொற்ப நிவாரண நிதியைக் கூடத் தன்வயப்படுத்திக் கொள்ளும் அதிகார வர்க்கத்தின் இந்தச் செயல், வெறும் நிதி முறைகேடு மட்டுமல்ல; மனிதநேயமற்ற பெருங்குற்றமாகும்.

​தகுதியான ஏழை எளிய குடும்பங்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டு, அதிகார பலமும் செல்வாக்கும் கொண்டவர்களுக்கு நிதியைத் திசை திருப்பியதன் மூலம், உண்மையான பயனாளிகளின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டுள்ளது.
​ஊழலற்ற, நேர்மையான நிர்வாகத்தை மக்களுக்கு வழங்குவதாகவும், அரச கட்டமைப்பிற்குள் நிலவும் முறைகேடுகளைக் கண்டிப்பதாக மாண்புமிகு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் உறுதியளித்துள்ளதுடன், இதற்காக விசேட விசாரணைக் குழுக்களையும் அமைத்துள்ளார். ஜனாதிபதியின் அந்த உறுதிமொழியை மெய்ப்பிக்கும் வகையில், நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுள்ள இந்த ஊழல் விவகாரத்திலும் அதிவிரைவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறார்.”

​நோர்வூட் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இந்த நிதி ஊழல் குறித்து எவ்வித அரசியல் அல்லது அதிகாரத் தலையீடுகளுமின்றி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வெளிப்படையான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

​விசாரணைகள் என்ற பெயரில் காலத்தைக் கடத்தி குற்றவாளிகளைத் தப்பவிடாமல், இந்த ஊழலில் நேரடியாக ஈடுபட்ட அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாகச் செயல்பட்ட நபர்கள் அனைவர் மீதும் சட்டப்படி தகுந்த தண்டனை உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

​முறைகேடாகப் பயன்படுத்தப்பட்ட மக்களின் நிதி முழுமையாக மீட்கப்பட்டு, அநீதி இழைக்கப்பட்ட, தகுதியான உண்மையான ஏழைப் பயனாளிகளுக்கு வட்டியுடன் அல்லது உரிய இழப்பீட்டுடன் மீள ஒப்படைக்கப்பட வேண்டும்.

​ தகுதிவாய்ந்த ஏழை குடும்பங்கள் விடுபடாத வகையில், அப்பகுதி மக்களின் பங்கேற்புடன் நோர்வூட் பிரதேச செயலகத்தின் ‘அஸ்வஸும’ பயனாளர் பட்டியல் உடனடியாக மறுபரிசீலனை செய்யப்பட்டுச் சீரமைக்கப்பட வேண்டும்.

​அரச கட்டமைப்புக்குள் நிலவும் இத்தகைய மக்கள் விரோத ஊழல்களுக்கு எதிராகத் தனது குரல் ஓயாது என நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர் கணேசன் இளையராஜா தனது அறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

manel