டெங்கு மரணங்கள் 68ஆக அதிகரிப்பு!
நாட்டில் இந்த வருடத்தின் நேற்று வரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
அந்தப் பிரிவு நேற்று வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, நாடளாவிய ரீதியில் இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 91,059 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பதிவாகியுள்ள மொத்த நோயாளர்களில் 52.98 வீதமானோர் 48,244 நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே இனங்காணப்பட்டுள்ளனர். மாவட்ட ரீதியாக அதிக பாதிப்பு கம்பஹா மாவட்டத்திற்கு ஏற்பட்டுள்ளதோடு, அங்கு 19,406 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் 18,101 நோயாளர்களும் , கண்டி மாவட்டத்தில் 6,491 நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளதுடன், கடந்த ஜூலை மாதத்திலேயே அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அந்த எண்ணிக்கை 29,971 ஆகும் என்றும் அந்த பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க, ஆகஸ்ட் மாதத்தின் கடந்த சில நாட்களில் மாத்திரம் 5,714 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும், 119 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் தொடர்ந்தும் டெங்கு அதிஅபாய வலயங்களாகச் சுகாதாரத்துறையினரால் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

