மஸ்கெலியாவில் வெள்ளம், மண்சரிவால் பாதிக்கப்பட்ட 164 குடும்பங்களுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கீடு!
மத்திய மலைநாட்டில் அண்மையில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, மஸ்கெலியா பிரதேச சபையின் ஏற்பாட்டில் நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
கடந்த வாரம் நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால், மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் கடுமையான மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு பதிவாகியிருந்தது; இதில் பாதிக்கப்பட்ட 10 வட்டாரங்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 164 குடும்பங்களுக்கு, தலா 5,000 ரூபாய் பெறுமதியான உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டன.
பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமை குறித்து மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார், கண்டி இந்திய உதவித் தூதுவர் திருமதி அதிமேதகு சரண்யா எஸ்.கே. அவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்றதைத் தொடர்ந்து, இந்திய தூதரகத்தின் விரைவான ஒத்துழைப்புடன் இந்த நிவாரணப் பொருட்கள் ஒருங்கிணைக்கப்பட்டு வழங்கப்பட்டன.
இந்நிகழ்வு இன்று மதியம் 3.00 மணிக்கு மஸ்கெலியா பி.எம்.டி. (PMD) கலாச்சார மண்டபத்தில், பிரதேச சபைத் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் கண்டி இந்திய உதவித் தூதரக அதிகாரிகள் திரு. யோகேஸ்வரன் மற்றும் தினேஷ்குமார் ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
மேலும், மஸ்கெலியா பிரதேச சபையின் உதவித் தவிசாளர் பரமசிவம் ராஜ் அசோக், செயலாளர் எஸ். ராஜவீரன், வட்டார உறுப்பினர்கள், மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எஸ். புஷ்பகுமார, கிராம உத்தியோகத்தர் குணதிலக்க, முன்னாள் அம்பகமுவ பிரதேச சபையின் தவிசாளர் கணபதி நகுலேஸ்வரன் மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

