பதுளை மாவட்ட வைத்தியசாலைகளுக்குரூ.181.5 மில்லியன் செலவில்புதிய அம்பியூலன்ஸ்கள்
பதுளை மாவட்ட வைத்தியசாலைகளுக்கு புதிய அம்பியூலன்ஸ்கள் மற்றும் நவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (11) பதுளை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
இதற்காக மொத்தம் ரூ.181.5 மில்லியன் நிதி செலவிடப்பட்டுள்ளது. இதில் 5 புதிய அம்பியூலன்ஸ்களை கொள்வனவு செய்வதற்காக ரூ.123.9 மில்லியனும், நவீன மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்காக ரூ.57.6 மில்லியனும் செலவிடப்பட்டுள்ளது.
இதன் கீழ் தியத்தலாவை ஆரம்ப வைத்தியசாலை, வெலிமடை ஆரம்ப வைத்தியசாலை, பண்டாரவளை ஆரம்ப வைத்தியசாலை, கொஸ்லந்த ஆரம்ப வைத்தியசாலை மற்றும் லுணுகலை ஆரம்ப வைத்தியசாலை ஆகியவற்றுக்கு புதிய அம்பியூலன்ஸ்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன, ஊவா மாகாண ஆளுநர் சட்டத்தரணி கபில ஜயசேகர, இளைஞர் விவகார பிரதி அமைச்சர் தினிந்து சமன் ஹென்னாயக்க மற்றும் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திர பண்டார உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
மேலும், ஊவா மாகாண பிரதம செயலாளர், ஊவா மாகாண சுகாதார செயலாளர், பதுளை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

