இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் பசறை, கனவரெல்ல தோட்டத்தில் 57 புதிய வீடுகள்
தற்போதைய இலங்கை அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனமான “வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்பதனை நனவாக்கும் வகையில், இந்திய அரசாங்கத்தின் நிதி மானியம் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் உள்கட்டமைப்பு அநுசரணையுடன் பஸ்ஸறையில் புதிய வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (05) உத்தியோகபூர்வமாக நடைபெற்றது.
தோட்டத் தொழிற்துறை மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சின் வழிகாட்டலில், இந்திய வீட்டுத் திட்டத்தின் 4ஆம் கட்டத்தின் (Indian Housing Project – Phase IV) கீழ் பதுளை மாவட்டம், பசறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கனவரெல்ல (Kanavarella) பகுதியில் இவ்விழா இடம்பெற்றது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் கண்டிதவராலய தூதுவர் ஹர்விந்தர் சிங் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் இணைந்து இதற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.
மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் நீண்டகாலமாக நிலச்சரிவு மற்றும் இயற்கை அனர்த்த அபாயங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வந்த மக்களுக்குப் பாதுகாப்பான, கௌரவமானதொரு நிலையான வாழ்க்கையை உரித்தாக்குவதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
கனவரெல்ல தோட்டத்தில் நிலச்சரிவு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் 57 குடும்பங்கள் இதற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு நிரந்தர வீட்டின் கட்டுமானப் பணிகளுக்காக இந்திய அரசாங்கம் தலா ரூ. 28 இலட்சம் நிதி மானியத்தை வழங்குகிறது.
வீதிகளுக்கான வசதிகள், நீர் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட மேலதிக உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் ஒரு வீட்டுக்குத் தலா ரூ. 4 இலட்சம் நிதியை ஒதுக்கியுள்ளது.
இதன்படி, ஒரு வீட்டு அலகிற்காக மொத்தம் ரூ. 32 இலட்சம் நிதி முதலீடு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்திய அரசாங்கத்தினால் மலையக மக்களுக்கு என அமுல்படுத்தப்பட்டு வரும் ஒட்டுமொத்த 10,000 வீடுகளைக் கொண்ட மாபெரும் இந்திய வீட்டுத் திட்டத்தின் நான்காம் கட்டத்தின் (Phase 4) கீழ் பசறை கனவரெல்ல பகுதியில் இந்த 57 வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
மகா சங்கத்தினர் உள்ளிட்ட சர்வ மதத் தலைவர்களின் ஆசிர்வாதங்களுடன் ஆரம்பமான இந்த விசேட அடிக்கல் நாட்டு விழாவில் சர்வதேச மற்றும் உள்நாட்டுப் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

