வைபவ் சூரியவன்ஷிக்கு அறிவுரை!
தம்புள்ளையில் நடைபெற்ற இந்தியா ‘ஏ’ மற்றும் இலங்கை ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான போட்டியை தொடர்ந்து, வைபவ் சூரியவன்ஷிக்கு இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் தலைவர் அநுர தென்னகோன் முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
தம்புள்ளை ரங்கிரி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்தியா ‘ஏ’ இலங்கை ‘ஏ’ மற்றும் ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான முத்தரப்புத் தொடரின் போட்டியைக் காண்பதற்காக அநுர தென்னகோன் வருகை தந்திருந்தார்.
இந்த போட்டி முடிவடைந்த பின்னர், மைதானத்தில் வைபவ் சூரியவன்ஷியை நேரில் சந்தித்த அநுர தென்னகோன் அவருக்குக் கட்டிப்பிடித்து தனது வாழ்த்துகளையும் ஊக்கத்தையும் தெரிவித்தார்.
அண்மையில் ஐபிஎல் தொடரில் அதிக ஓட்டங்களைக் குவித்து ஓரஞ்சு தொப்பியை வென்று, இந்திய அணியில் இடம்பிடித்துள்ள சூரியவன்ஷியின் அதிரடி ஆட்டம் குறித்துப் பாராட்டிய தென்னகோன், அவரை “ஒரு தலைமுறையில் ஒருமுறை மட்டுமே பிறக்கக்கூடிய அசாத்திய திறமை கொண்ட வீரர்” என விவரித்தார்.
“நீங்கள் உங்களது விளையாட்டைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும். வெளியே இருந்து சமூகம் மற்றும் ஊடகங்கள் மூலம் உங்களுக்காக உருவாக்கப்படும் தேவையற்ற பேச்சுகளையும் சத்தங்களையும் முற்றிலும் மறந்துவிடுங்கள். துரதிர்ஷ்டவசமாக உங்களால் இன்றைய போட்டியில் பெரிய அளவில் ஓட்டங்களைக் குவிக்க முடியாமல் போயிருக்கலாம். ஆனால் அதுதான் விளையாட்டின் இயல்பு, உங்களால் ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரியாக விளையாட முடியாது.”என அறிவுரை வழங்கினார்.

