ஈழக் கலைஞர் செல்வின் தாஸிற்கு ஆஸ்திரேலியாவில் அதியுயர் கௌரவம்

ஈழக் கலைஞர் செல்வின் தாஸிற்கு ஆஸ்திரேலியாவில் அதியுயர் கௌரவம்

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள ஸ்டான்ஹோப் கார்டன்ஸ் (Stanhope Gardens) பகுதியில், ஆஸ்திரேலிய பஞ்சாபி பெண்கள் சங்கம் சார்பில் மிகக் கோலாகலமாக அண்மையில் நடைபெற்ற 21-வது ஆண்டு “மேளா தீயான் தா” (Mela Teeyan Da) பண்பாட்டுத் திருவிழாவில், ஈழத் தமிழ்க் கலைஞர் செல்வின் தாஸ் அவர்கள் சிறப்பு விருது வழங்கிப் பெருமதிப்புடன் கௌரவிக்கப்பட்டார்.

ஆஸ்திரேலிய மண்ணில் இருந்து தமிழ் திரைப்படத் துறைக்காகத் தொடர்ச்சியாக ஆற்றி வரும் அளப்பரிய பங்களிப்பினைப் பாராட்டி, ஈழத்தின் பெருமைமிகு கலைஞரும், புகழ்பெற்ற “கூத்தாடி” திரைப்படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான செல்வின் தாஸ் அவர்களுக்கு இந்த “சிறப்பு விருது” வழங்கப்பட்டது.

புலம்பெயர் மண்ணிலும் நமது கலைப் பாரம்பரியத்தை நெஞ்சில் சுமந்து, சர்வதேச அரங்கில் தமிழ் சினிமாவின் எல்லையை விரிவாக்க அவர் மேற்கொண்டு வரும் அர்ப்பணிப்புமிக்க கலைப்பயணத்திற்கு, ஆஸ்திரேலிய வாழ் பன்முகக் கலாச்சார சமூகத்தினர் மத்தியில் கிடைத்த இந்த அங்கீகாரம் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கும், ஈழக் கலைஞர்களுக்கும் பெருமிதம் சேர்க்கும் ஒரு உணர்வுப்பூர்வமான வரலாற்றுத் தருணமாக அமைந்தது.

ஆயிரக்கணக்கான சர்வதேசப் பார்வையாளர்கள் மற்றும் பன்முகக் கலாச்சார மக்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில், நியூ சவுத் வேல்ஸ் (NSW) துணை முதல்வர் ப்ரூ கார் (Prue Car), கூட்டாட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மிஷெல் ரோலண்ட் (Michelle Rowland), நாடாளுமன்ற உறுப்பினர் வாரன் கிர்பி (Warren Kirby) உள்ளிட்ட பல முக்கிய ஆஸ்திரேலிய அரசியல் தலைவர்களும் சமூகத் தலைவர்களும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். அவர்கள் விருது பெற்ற கலைஞர் செல்வின் தாஸ் அவர்களின் கலைச் சேவையை வெகுவாகப் பாராட்டியதுடன், தங்களது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

பஞ்சாபி கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் பெண்கள் மேம்பாட்டை மையமாகக் கொண்டு, அதன் ஏற்பாட்டாளர்கள் கமல் கவுர் மற்றும் வருண் திவாரி ஆகியோரால் வெற்றிகரமாக நடத்தப்பட்ட இந்த விழாவில், வண்ணமயமான பாரம்பரிய உடைகளுடன் ஆயிரக்கணக்கான பெண்களும் சிறுமிகளும் பங்கேற்றிருந்தனர். விழாவின் சிறப்பம்சங்களாக கித்தா நடனம், போலியாண் நாட்டுப்புறப் பாடல்கள், ‘மிஸ் தீயான்’, ‘மிஸஸ் தீயான்’ அழகிப் போட்டிகள் மற்றும் பல்வேறு இளையோர் குழுக்களின் கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின.
மேலும், பஞ்சாபின் கிராமப்புற வரலாற்றை பிரதிபலிக்கும் பாரம்பரியப் பொருட்களின் கண்காட்சி மற்றும் பஞ்சாபி ஆடைகள், ஆபரணங்கள், சுவையான பாரம்பரிய உணவுகள் அடங்கிய வணிகக் கடைகளும் அமைக்கப்பட்டிருந்தன.

விழாவின் நிறைவில், தங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த ஏற்பாட்டாளர்கள், அடுத்த தலைமுறைக்கு கலாச்சார விழுமியங்களைக் கடத்தும் நோக்கில் இத்தகைய விழாக்கள் தொடரும் என உறுதிபடத் தெரிவித்தனர்.

manel