மக்களின் கண்ணீரைத் துடைப்பதற்காக போர் வீரர்கள் ஒரு சிறந்த பணியைச் செய்துள்ளனர்!
போர் வீரர்கள் தாய்நாட்டை விடுவிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டபோது, அவர்களின் நோக்கமும் பிரார்த்தனையும் தாய்நாட்டை ஓர் அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதே என்றும், அந்தப் பிரார்த்தனையை நிறைவேற்ற அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (19) பத்தரமுல்லையில் நடைபெற்ற 17 ஆவது தேசிய போர் வீரர்கள் நினைவு தின விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, இந்நாட்டின் இரண்டு கோடி மக்களின் கண்ணீரைத் துடைப்பதற்காக போர் வீரர்கள் ஒரு சிறந்த பணியைச் செய்துள்ளனர் என்றும், அந்தப் பணிக்காக அவர்கள் அனைவருக்கும் தனது உத்தம மரியாதையைச் செலுத்துவதாகவும் கூறினார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்:
“ஓர் அபிவிருத்தியடைந்த நாடு தேவை.. அது உங்களது பிரார்த்தனை. இந்தத் தாய்நாட்டை விடுவிக்கும் போராட்டத்தில், நாட்டை விடுவிப்பதைப் போன்றே எமது நாட்டை ஓர் அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றும் நோக்கமும் உங்களுக்கு இருந்தது. அதேபோல, முற்றிலும் நீதியான, சட்டத்தை மதிக்கின்ற ஒரு நாடு உங்களுக்குள் இருந்தது. உலகை வெல்லும் ஒரு நாடு என்பது அவர்களின் மரணத்தருணப் பிரார்த்தனையாக இருந்தது. அவர்கள் தமது உயிரைத் தியாகம் செய்தது அந்தப் பிரார்த்தனைகளுடன்தான். இந்த போர் வீரர்கள் நினைவுத்தூபிக்கு முன்பாக நின்று, அவர்கள் பிரார்த்தனை செய்த அந்த எதிர்காலத்தை உருவாக்கும் பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்றும், அவர்களின் பிரார்த்தனைகளை ஒருபோதும் குறைத்து மதிப்பிடவோ, காட்டிக்கொடுக்கவோ மாட்டோம் என்றும் நான் உறுதியளிக்கிறேன்.
ஒவ்வொரு வெற்றியையும் கொண்டாடும் தருணத்தில் நாம் நினைவுகூர வேண்டிய ஒரு விடயம் உள்ளது. தங்களது தந்தை வருவார் என இன்றும் வாசலில் காத்திருக்கும் பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தங்களது தந்தையின் பாசத்தைப் பெறும் பாக்கியம் இனி ஒருபோதும் கிடைக்காது. அதேபோல், கணவனை இழந்த மனைவிகள் தங்களது வாழ்நாள் முழுவதும் அந்தத் துயரத்தை அனுபவிக்கிறார்கள். அவர்களுக்கு மீண்டும் கணவன் கிடைக்கப்போவதில்லை என்பதை நாம் அறிவோம். இழந்த பிள்ளைகளின் நினைவுகளுடன் ஏனைய பிள்ளைகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் தாய்மார்களும் தந்தைமார்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கு அந்தப் பிள்ளைகள் மீண்டும் கிடைக்கப் போவதில்லை என்பது நமக்குத் தெரியும்.
இவர்கள் அனைவரும் போர் வீரர்கள் நினைவுத்தூபிக்கு அருகில் வந்து தங்களுக்குரியவர்களைத் தேடுகிறார்கள். அவர்கள் வாசலுக்கு வரப்போவதில்லை என்பது உண்மைதான். தங்களது இதயத்தின் ஆழமான இடத்தில் தங்களது கணவன், பிள்ளை, உறவினர், சகோதரன் புதைந்துள்ளார் என்பது உண்மைதான். இருப்பினும் அவர்கள் தேடுகிறார்கள். அங்குள்ள பெயரைத் தேடிக் கண்டுபிடித்து, இந்த நினைவுத்தூபிக்கு முன்னால் நெஞ்சில் கைவைத்து ஒரு பெருமூச்சு விடுகிறார்கள். இந்த உணர்வுகளுக்கு எம்மால் பதிலளிக்க முடியுமா? இழந்த போர் வீரர்களை நினைவுகூரும் நாம், அவர்கள் செய்த உன்னத தியாகத்திற்கு மரியாதை செலுத்துவதுடன் மட்டும் நின்றுவிட முடியுமா? அவர்களின் தியாகத்தை நினைவுகூர்வது மட்டுமே போதுமானதா? அவர்களுக்கு மரியாதை செலுத்துவது மட்டும் போதாது என்றே நாம் உறுதியாக நம்புகிறோம். அவர்கள் பிரார்த்தனை செய்த அந்த அரசை உருவாக்கும் பொறுப்பு உயிரோடு இருக்கும் நமக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆபத்திலும், அச்சுறுத்தலிலும் அவர்கள் முன்னின்று செயற்பட்டதற்கான சான்றுகள் ஏராளமாக உள்ளன. எதிரிகளின் அச்சுறுத்தலாக இருந்தாலும் சரி, இயற்கை பேரிடராக இருந்தாலும் சரி, அவர்கள் தங்களது உயிரைத் தியாகம் செய்து இணையற்ற சேவையாற்றியுள்ளனர். யுத்தத்தின் போது நாட்டைப் பாதுகாத்தது போல, பேரிடர்களின் போது உயிர்களைக் காப்பாற்றவும் அவர்கள் உன்னதமான தியாகங்களைச் செய்துள்ளனர் என்பதை நாம் அறிவோம். எனவே, அவர்கள் எப்போதும் எமது இதயங்களில் நீங்காத நினைவாக இருப்பார்கள் என்ற உத்தரவாதத்தை வழங்க விரும்புகிறேன்.
இந்தக் கடினமான பயணத்தின் இறுதி நோக்கம் இந்நாட்டை ஒரு பிரகாசமான, முன்மாதிரியான நாடாக மாற்றுவதாகும். போர் வீரர்களின் பிரார்த்தனையும் அதுவே ஆகும். அந்தப் பிரார்த்தனையை நிறைவேற்றும் பொறுப்பு நமக்கு உள்ளது. நாம் சர்வதேச அரங்கில் இலங்கையின் பிம்பத்தை உயர்த்தி வருகிறோம். எமது நாட்டின் சட்டம் மற்றும் நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையை மதிக்கின்ற ஒரு நாடாக இதனை மாற்றியுள்ளோம். நாட்டைப் பாதுகாப்பதற்காகத் தங்களது உயிரைத் தியாகம் செய்த அனைவரதும் பிரார்த்தனைகளை எமது தோள்களில் சுமந்து கொண்டு, ஒரு முன்மாதிரியான நாட்டைத் கட்டியெழுப்பும் உறுதியான பயணத்தில் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். இதுவே அவர்களின் பிரார்த்தனை என நான் கருதுகிறேன்.
யுத்தத்தின் கதையை வரலாற்றிடம் ஒப்படைத்துவிட்டு, நிலையான அமைதியின் வழிபாட்டை நிகழ்காலத்துடன் இணைத்துள்ளோம். நமது வழிபாடு அமைதியின் வழிபாடாகும். யுத்தத்தை வரலாற்றிற்குச் சொந்தமான ஒரு கதையாக மாற்ற வேண்டும். எமது நாட்டின் முப்படைகள் உள்ளிட்ட பாதுகாப்புப் பிரிவினர் தங்களது கடமையைச் சரியாகச் செய்துள்ளனர். அவர்கள் பிரிவினைவாதத்திற்கு எதிராகவே யுத்தம் செய்தார்கள். இந்தத் தாய்நாடு சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் ஆகிய நாம் அனைவரும் எந்தவொரு இடத்திலும் வாழ்வதற்கான உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டிய ஒரு நாடாகும். இந்தத் தாய்நாட்டைப் பிரிப்பதற்கு எதிராகவே நீங்கள் போராடினீர்கள். அவர்கள் மனிதர்களுக்கு எதிராகவோ, ஒரு இனத்திற்கு எதிராகவோ யுத்தம் செய்யவில்லை. யுத்தத்தின் கொடூரமான விளைவுகளை அனைத்து இன மக்களும் அனுபவிக்க வேண்டியிருந்தது. ஒரே நாட்டின் இளைஞர்கள் இந்த யுத்தத்தினால் உயிரிழந்தனர். சுயநல, அதிகாரப் பேராசை கொண்ட அரசியல்வாதிகள் மற்றும் தீவிரவாதிகளின் அசிங்கமான நிகழ்ச்சி நிரல்களால் ஒரே நாட்டின் மக்கள் இரண்டாகப் பிரிந்தனர். வடக்கிலும் தெற்கிலும் இருந்த அதிகாரப் பேராசை கொண்ட அசிங்கமான அரசியலே இந்த யுத்தத்தை உருவாக்கியது. அரசியல் அநாகரிகம் மனிதநேயத்தை ஒரு கால்பந்தாக மாற்றியது.
இன்றும் சிலர் யுத்தம் நல்லதா கெட்டதா என்று விவாதிக்கிறார்கள். யுத்தம் நல்லதா கெட்டதா என்று தீர்ப்பு வழங்க நான் தயாராக இல்லை. ஆனால், மீண்டும் ஒருபோதும் யுத்தம் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்வதே எனது கடமையாகும். எனக்கு முன்னால் இருக்கும் போர் வீரர்களின் பிரார்த்தனை என்ன? உங்களது பிள்ளையை யுத்தக் களத்திற்கு அழைக்கும் ஒரு நாடு உங்களுக்குத் தேவையா? உங்களது கணவரை மீண்டும் ஒரு யுத்தத்திற்கு அழைக்கும் நாடு தேவையா? நானும் எனது அரசாங்கமும் தோன்றி நிற்பது யுத்தம் நல்லதா கெட்டதா என்று ஆராய்வதற்காக அல்ல. மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்வதற்காகவே நானும் எனது அரசாங்கமும் தோன்றி நிற்கிறோம். அதுவே அனைத்து போர் வீரர்களினதும் இந்நாட்டு தேசப்பற்றாளர்களதும் பிரார்த்தனை என நான் நினைக்கிறேன்.
ஜனநாயக மற்றும் சுதந்திரமான ஒரு அரசுக்காக நாம் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். திறமையும் தகுதியும் உள்ள அனைவரும் முன்னுக்கு வரக்கூடிய ஒரு நாட்டை உருவாக்க வேண்டும். விசேட சலுகைகளுடன் வாழ்ந்த சிலருக்கு இது வேதனையைத் தரலாம். அனைவரும் சட்டத்தின் முன் சமமாவது, விசேட சலுகைகளைப் பெற்றுக் கொண்டிருந்த குழுக்களுக்கு வேதனையான ஒரு விடயமாக இருக்கலாம். தாங்கள் விசேடமானவர்கள் என்று நினைத்துக்கொண்டு மற்றவர்களை ஒடுக்கியவர்கள், இனிமேலும் தாங்கள் விசேடமானவர்கள் இல்லை என்பதால் கலக்கமடையலாம். தாங்கள் விசேடமானவர்கள் என்றும், சட்டத்திற்கு மேலானவர்கள் என்றும், தங்களுக்கு விசேட சலுகைகள் உள்ளன என்றும் அவர்கள் நினைத்தார்கள். ஆனால் அவை இழக்கப்படும் போது அவர்கள் கலக்கமடையலாம். வரலாற்றில் என்றுமில்லாதவாறு தராதரம் பாராமல் சட்டம் அவர்களைத் பின்தொடர்வது குறித்து அவர்கள் ஆத்திரமடையலாம். ஆனால் நாம் முழுமையான நீதிக்காக நிபந்தனையின்றி தோன்றி நிற்போம். மக்களின் எதிர்பார்ப்புகளை நிலையான முறையில் நிறைவேற்றுவோம். இதுவே உயிரிழந்த போர் வீரர்களின் பிரார்த்தனை என்று நான் நினைக்கிறேன்.
இந்நாட்டின் இரண்டு கோடி மக்களின் கண்ணீரைத் துடைத்த அனைவருக்கும் எமது உத்தம மரியாதையையும் கௌரவத்தையும் செலுத்துகிறோம். அதில் எமது போர் வீரர்கள் ஒரு சிறந்த சேவையைச் செய்துள்ளனர். அவர்கள் இல்லாவிட்டால் இந்த இரண்டு கோடி மக்களின் கண்ணீரைத் துடைக்க முடிந்திருக்காது. அந்தப் பணியின் முன்னோடிகள் நீங்கள், உங்களுக்கு மீண்டும் மீண்டும் எமது கௌரவத்தைச் செலுத்துகிறோம். மேலும் யுத்தம் இல்லாத, அமைதி நிறைந்த ஒரு சுதந்திரமான நாட்டில் முன்னோக்கி பயணிக்குமாறு நான் அழைக்கிறேன்.”

