மீள்கட்டமைப்புக்கு உலக வங்கி நிதி செயல்படுத்த அமைச்சரவை அனுமதி
அனர்த்தத்திற்கு பின்னரான மீள்கட்டமைப்புத் தேவைகளுக்கு உதவி வழங்குவதற்காக தற்போது அமுல்படுத்தப்படும் உலக வங்கித் திட்டத்தில் உள்ளடங்கியுள்ள அவசர பதில்வினையாற்றல் கூறுகளை இயங்கு நிலைக்கு கொண்டு வருதலுக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
அண்மைக்ககால வரலாற்றில் இடம்பெற்ற மிகவும் மோசமான இயற்கை அனர்த்தங்களில் ஒன்றான தித்வா சூறாவளி காரணமாக ஏற்பட்ட கடும் மழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் மண்சரிவு நாடு பூராவும் ஏற்பட்டது.
அதன் மூலம் உயிரிழப்புகள், மக்கள் இடம்பெயர்வு, வாழ்வாதாரம் அழிவடைந்து மற்றும் அத்தியாவசிய பொது வசதிகள் அழிவடைந்தமையுடன், விவசாயக் காணிகளும் அழிவடைந்துள்ளன. மேற்குறித்த நிலையில் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதுடன், உடனடி பதில்வினையாற்றுதல் தொடக்கம் நீண்ட கால தலையீடுகள் வரையான விரிவான வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.
இருதரப்பு மற்றும் பல்தரப்பு அபிவிருத்தி பங்காளர்கள், கடன் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் இலாப நோக்கற்ற அமைப்புகள் உள்ளிட்ட சர்வதேச சமூகம் ஏற்கனவே உடனடி தலையீடு மேற்கொண்டுள்ளன அல்லது தமது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளன.
அதற்கமைய சேதமடைந்த உட்கட்டமைப்பு வசதிகளை விரைவாக கட்டியெழுப்புவதற்காக அவ்வாறான உட்கட்டமைப்பு வசதிகள் விடயப்பரப்பு தொடர்பான வெளிநாட்டு நிதியின் கீழ் தற்போது அமுல்படுத்தப்படும் அவசர பதில்வினையாற்றல் கூறுகளை இயங்கு நிலைக்கு கொண்டு வருவதற்கும், உத்தேச அவசர பதில்வினையாற்றல் கூறுகள் திட்டத்தை அமுல்படுத்துவதற்காக 92 – 112 இடையிலான அமெரிக்க மில்லியன் டொலர் தொகையை பெறுவதற்கும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

