4 மணிநேர சுற்றிவளைப்பில் 14 பேர் கைது
கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட படோவிட்ட 1, 2 மற்றும் 3 ஆம் கட்டப் பகுதிகளை உள்ளடக்கியதாக, கல்கிஸ்ஸை பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவு, கடற்படை மற்றும் பொலிஸ் மோப்ப நாய்கள் உதவியுடன் நேற்று (01) முன்னெடுக்கப்பட்ட சுமார் 4 மணிநேர விசேட நடவடிக்கையின் போது சந்தேகத்தின் பேரில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 2830 மில்லிகிராம் ஹெரோயின், 3890 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 6000 மில்லிகிராம் கஞ்சா மற்றும் 10 போதை மாத்திரைகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட 14 பேரில் 9 பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள், பாரிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள், பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் மற்றும் வெளிப்பிரதேசங்களில் இருந்து வந்து தங்கியிருப்பவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காகவும், அப்பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களைக் கருத்திற்கொண்டும் இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
படோவிட்ட பொலிஸ் நிலையம் மற்றும் கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையம் என்பன இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளன.

