22ஆவது திருத்தத்தின் ஊடாக நீதித்துறையை, நிறைவேற்றுத்துறையின் பொம்மையாக்க முயற்சி
ஜனநாயகத்துக்கான வெளியை இந்த அரசாங்கம் இல்லாமல் செய்து, 22 ஆவது திருத்தத்தின் ஊடாக நீதித்துறையின் சுதந்திரத்திற்கு மரண அடி கொடுத்து, நிறைவேற்றுத்துறையின் அதிகாரங்களை பலப்படுத்திக் கொண்டு கனம் நீதித்துறையை ஜனாதிபதியின் அடிமைத்தனத்திற்கு உட்படுத்த அரசாங்கம் முயற்சிக்கின்றது.
இது 220 இலட்சம் மக்களின் ஜனநாயக உரிமைக்கு பாரிய சவால்களை விடுவதுடன், பேச்சுரிமை, ஒன்று கூடும் உரிமை, தாம் விசுவாசம் கொள்ளும் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளுதல் போன்றவற்றை இல்லாமல் செய்து, நாட்டை ஜே.வி.பி யின் சர்வாதிகார ஆட்சி நோக்கி கொண்டு சென்று கொண்டிருக்கின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மாத்தளை மாவட்டம், லக்கல தேர்தல் தொகுதி ஐக்கிய மகளிர் சக்தியை தாபிக்கும் கூட்டம் நேற்று (05) நாவுல நகரில் இடம்மெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
இந்த அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக நிறைவேற்றுத்துறை நீதித்துறைக்கு தாக்கம் செலுத்துகின்றது என வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நினைத்தால், நாட்டுக்கு வரவிருக்கும் முதலீடுகள் கூட இதனால் இல்லாது போய்விடும் அல்லவா.
தற்போதும் கூட அரசாங்கத்தால் பாரிய அளவிலான முதலீட்டாளர்களை நாட்டுக்கு அழைத்துவர முடியாமல் போயுள்ளதையும் நாம் கவனத்திற் கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
தேர்தல் காலத்தில் பல கூட்டங்களை நடத்தி மக்களுக்கு வெற்றுப் பொய் வாக்குறுதிகளை வழங்கி, தற்போது 2 வருட நிறைவைக் கொண்டாடும் இந்த பொய் அரசாங்கம், மேலும் பல கூட்டத் தொடர்களை நடத்தி அந்தப் பொய்களை உறுதிப்படுத்திக் கொண்டு செல்கின்றன. இந்த அடக்குமுறைசார், எதோச்சதிகாரம் சார்ந்த அரசாங்கத்தை தோற்கடிக்க வேண்டும்.
விவசாயிகள், மீனவர்கள் என 220 இலட்சம் மக்களையும், மக்களின் நலன்களையும் பாதுகாக்கும் அரசாங்கத்தைக் கொண்டுவர வேண்டுமென்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
தற்போது நாட்டு மக்கள் பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். நாட்டின் 220 இலட்சம் மக்களில் பெரும்பாலானோர் பாரிய பொருளாதாரச் சிரமங்களுக்கு மத்தியில் கஷ்டப்பட்டு வாழ்க்கை கொண்டு நடத்தி வருகின்றனர. குடும்பங்களின் நாளாந்த வருமானம் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலைக்கு வந்துள்ளன.
முறையான போசாக்கையும் கல்வியையும் வழங்க முடியாமல் பெற்றோர்கள் நிர்கதிக்குள்ளாகி காணப்படுகின்றனர். இதற்குப் பிரதான காரணம் “வளமான நாடு, அழகான வாழ்க்கை” ஒன்றை உருவாக்குவதாகக் கூறி, பொய்களை மக்கள் முன் வைத்து, அதனை நடைமுறைப்படுத்த முடியாமலும், தமது இயலாமையாலும் பாதிக்கப்பட்டுள்ள இந்த அரசாங்கம் மீண்டும் மக்களை ஏமாற்றும் பேரணித் தொடர்களை நடத்தி வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
யாருக்கும் அடிபணியாமல், சுயமாக சொந்த காலில் நின்று வாழ வேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும். சுயமரியாதையைப் பாதுகாத்துச் சிறந்த வாழ்க்கைக்குள் மக்கள் முன்னேறிச் செல்லும் யுகமொன்றை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். தற்போதைய அரசாங்கத்தின் பொய் உரைக்கும் கூட்டத்திற்கு ஏமாந்து நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் அநாதரவாகியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
வயல் நிலங்கள் செழிப்படையும், தொழிற்சாலைகள் உருவாகும் யுகம் முடிவடைந்து, தொழிற்சாலைகள் நாட்டை விட்டுச் செல்லும் யுகமே இன்று உருவாக்கப்பட்டுள்ளன. நாட்டில் ஏலவே அமைந்து காணப்படும் வெளிநாட்டு முதலீடுகளை பாதுகாத்து கொள்ள முடியாத அரசாங்கமாக இந்த அரசாங்கம் காணப்படுகின்றது.
முறையான முற்போக்கான ஆட்சியொன்று இல்லாமையும், தெளிவான சிந்தனையுடன் முன்னோக்கிச் செல்லும் அரசாங்கமொன்றும் இல்லாமையே இதற்கு பிரதான காரணமாகும்.
பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றி திசைதிருப்பியதன் காரணமாக தற்சமயம் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். முறைமையில் மாற்றத்திற்காக புள்ளடி இட்ட மக்களுக்கு மேற்பார்வைக்கு மாத்திரம் சில விடயங்களை காண்பித்து உண்மையான மாற்றத்திற்கான நடவடிக்கைகளை எடுக்காதிருக்கின்றனர்.
தற்சமயம் முறைமையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கும் அதேவேளை கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்டு வந்த சிறந்த மக்கள் நலன் திட்டங்களைக் கூட முறையாக முன்னெடுத்துச் செல்ல முடியாமல் தடமாறி வருகின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.
இன்று அரசாங்கம் தனி இலக்குடன் முன்னோக்கிச் சென்று நாட்டில் சர்வாதிகாரத்தை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுத்துவருகின்றது. ஹிட்லரைப் போன்ற தனிக் கட்சி ஆட்சியை நாட்டில் ஸ்தாபிக்க பயங்கரவாதம், அச்சுறுத்தல், குற்றங்கள் மூலம் மக்களை பயமுற்றுத்தி, நிச்சயமற்ற நிலைமகளை காட்டி தங்களது கட்சிக்கு மாத்திரமே எல்லாவற்றையும் செய்ய முடியும், எல்லாவற்றிற்கும் உரிமை உண்டு என்று கூறும் தனிக் கட்சி ஆட்சியை நோக்கி இந்த அரசாங்கம் சென்று கொண்டிருக்கின்றது. மக்களின் பிரச்சினைகளுக்கும் சிக்கல்களுக்கும் தீர்வுகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்தபாடில்லை.
அரசாங்கத்திற்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாமல் போயுள்ளன. வாக்குறுதியளித்த 12 இலட்சம் விட்ஸ் (Vitz) ரக கார் இன்று கிடைத்தபாடில்லை, 33 வீதத்தால் மின்சாரக் கட்டணம் குறைந்தபாடில்லை, இன்றும் கூட துறைமுகத்தில் இறக்கப்படும் விலைக்கு எண்ணெய் கிடைத்தபாடில்லை, அஸ்வெசும பயனாளர்கள் கூட இன்று பட்டியல்களில் இருந்து வெட்டப்படுகின்றனர், மக்களுக்குக் கிடைக்கவேண்டிய நிவாரணங்கள் கூட வெட்டப்படுகின்றன.
இவ்வாறான நிலைமை நிலவும்போது ஒருவருக்கு ஒரு மாதத்திற்கு 17,315 ரூபாவை வைத்துக் கொண்டு 30 நாட்களுக்கு வாழ முடியும் என அரசாங்கம் கூறுவது வேடிக்கையான விடயமாக அமைந்து காணப்படுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

