2026 கித்துள் கண்காட்சி ஆரம்பம்:

உள்நாட்டு கித்துள் கைத்தொழிலை மேம்படுத்துதல், கித்துள் சார்ந்த உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் மற்றும் இத்துறையில் ஈடுபட்டுள்ள தொழில்முனைவோரை ஊக்குவித்தல் ஆகிய நோக்கங்களுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “KITHUL EXPO – 2026” (Culinary) கண்காட்சியின் ஆரம்ப விழா சுதர்ஷி மண்டபத்தில் (27) நடைபெற்றது.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கீழ் இயங்கும் கித்துள் அபிவிருத்தி சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
நிகழ்வில் உரையாற்றிய பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் கித்துள் கைத்தொழிலின் அபிவிருத்திக்காக 82 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், நவீன தொழில்நுட்பத்தை இணைத்து எமது உற்பத்திகளை அதிகரிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
அரசியல்வாதிகளால் மாத்திரம் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது எனவும் அதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் வலியுறுத்திய அவர், கடந்த இரண்டு வருடங்களுக்குள் கடுமையாக உழைத்து நாட்டின் வங்குரோத்து நிலையை இல்லாதொழித்துள்ளதாகத் தெரிவித்தார். அத்துடன், அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை அதிகரித்துள்ள போதிலும், சிலர் அரச ஊழியர்களைத் தூண்டிவிட்டு அரசியல் இலாபம் தேட முயற்சிப்பதாகவும், 80 சதவீதமானோர் இந்த அரசாங்கத்திற்கே வாக்களித்துள்ளனர் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
கித்துள் கைத்தொழில் சார்ந்த உள்நாட்டு மரபுரிமை மற்றும் உற்பத்திகளைப் பிரபல்யப்படுத்தும் நோக்கில் நடைபெறும் இக்கண்காட்சியின் ஊடாக கித்துள் பாணி, கித்துள் கருப்பட்டி, கித்துள் மா உள்ளிட்ட பல்வேறு கித்துள் உற்பத்திகளையும், பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகள் மற்றும் கித்துள் சார்ந்த கைப்பணிப் பொருட்களையும் பொதுமக்கள் பார்வையிட்டு சுவைத்துப் பார்க்க முடியும்.மேலும், கித்துள் சார்ந்த உணவுத் தயாரிப்பு தொடர்பான நேரடி செய்முறை விளக்கங்கள், உற்பத்திப் பொருட்களின் கண்காட்சி மற்றும் உள்நாட்டு தொழில்முனைவோரைச் சந்திப்பதற்கான வாய்ப்புகளும் இக்கண்காட்சியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
2026 நவம்பர் 27, 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் காலை 10.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நடைபெறவுள்ள இக்கண்காட்சியைப் பார்வையிட வருமாறு கித்துள் கைத்தொழில் மீது ஆர்வமுள்ள அனைவருக்கும் ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

