17 மில்லியன் செலவில் புதிய ஆயுர்வேத மத்திய மருந்தகம் திறந்து வைப்பு!
கிழக்கு மாகாண சபையின் 2025 ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டின் கீழ், திருகோணமலை – பதவிஸ்ரீ புற பிரதேசத்தில் ரூபா 17 மில்லியன் செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆயுர்வேத மத்திய மருந்தகம் நேற்று (18) மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்தியர் எம்.ஏ.நபீல் தலைமையில் இடம்பெற்ற இந்த திறப்பு விழாவுக்கு, கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர பிரதம அதிதியாக கலந்துகொண்டு குறித்த மருந்தகத்தை திறந்து வைத்து மக்கள் பாவனைக்கும் கையளித்து வைத்தார்.
அப்பிரதேச மக்களின் நீண்டகால சுகாதாரத் தேவையை நிவர்த்தி செய்யும் நோக்கில் நவீன வசதிகளுடன் இந்த புதிய மருந்தகத்தின் கட்டடத் தொகுதி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அப்பகுதி மக்கள் தரமான ஆயுர்வேத வைத்திய சேவைகளை இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
இத்திறப்பு விழாவில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன, பதவிஸ்ரீ புற பிரதேச சபையின் தவிசாளர் செல்வி ஷீலா கருணநாயக்க, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் பிரதேச செயலாளர் உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகளும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

