160ஆவது பொலிஸ் தினம்: ஹட்டனில் பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து நடத்திய விசேட இரத்ததான முகாம்!
இலங்கை பொலிஸாரின் 160ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஹட்டன் தலைமையக பொலிஸாரால் ஐந்தாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட விசேட இரத்ததான முகாம் இன்று (03) ஹட்டன் தலைமையக பொலிஸ் வளாகத்தில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற்றது. வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் உயிர்களைக் காப்பாற்றுவதற்கு தேவையான இரத்தக் கையிருப்பைப் பேணுவதும், மனிதாபிமான பணியில் பங்களிப்புச் செய்வதும் இதன் பிரதான நோக்கமாகும்.
சட்டம், அமைதியைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், பொதுமக்களின் தேவைகளை அறிந்து செயல்படும் நிறுவனமாகவும் பொலிஸார் திகழ்கின்றனர் என்பதை உணர்த்தவும், பொலிஸாருக்கும் சமூகத்திற்குமான உறவை வலுப்படுத்தவும் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஹட்டன் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகர மற்றும் கொட்டகலை இராணுவ முகாமின் பிரிகேடியர் சாகர பெரேரா ஆகியோரின் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. பொதுமக்கள் பாதுகாப்புக் குழு ஆலோசனைச் சபையும் ஹட்டன் தலைமையக பொலிஸாரும் இணைந்து நடத்திய இதற்கு, குடாகம ‘ரிவிசந்த’ மகளிர் சங்கம் தீவிர ஒத்துழைப்பை வழங்கியது. மேலும், KPL Foundation, CT Groups மற்றும் ஹட்டன் லயன்ஸ் கழகம் (Lions Club of Hatton 306-D10) ஆகியன அனுசரணை அளித்தன.
ஒரு துளி இரத்தம் மனித உயிரைக் காக்கும் என்பதால் இவ்வாறான நிகழ்வுகள் தொடர வேண்டும் என வலியுறுத்திய ஏற்பாட்டாளர்கள், 160ஆவது பொலிஸ் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பொதுமக்களுடன் இணைந்து இந்த மனிதாபிமானப் பணியை முன்னெடுத்தது குறிப்பிடத்தக்கது.

