10 ஆண்டுகளுக்குப் பின்னர் லக்கல நகர மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு
மொரகஹகந்த மற்றும் களுகங்கை நீர்த்தேக்கங்களை அமைப்பதற்காக இடம்பெயர்க்கப்பட்டு லக்கல புதிய நகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடியமர்த்தப்பட்ட மக்களின் சுமார் 10 ஆண்டுகால குடிநீர் பிரச்சினைக்கு தற்போது தீர்வு கிடைத்துள்ளது.
இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு ஏனைய அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டிருந்த போதிலும், குடிநீர் பிரச்சினை நீண்ட காலமாக தொடர்ந்தது. இதனால், மகாவலி அதிகாரசபையின் தலையீட்டில் பவுசர்கள் மூலம் நீர் விநியோகிக்கப்பட்ட போதிலும், அது அன்றாட சுகாதாரமான வாழ்க்கைக்குப் போதுமானதாக இருக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இடம்பெயர்ந்த மக்களுக்காக சுமார் 2014ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நீர் வழங்கல் திட்டம் 2018ஆம் ஆண்டுக்குள் நிறைவடைய திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், பல்வேறு காரணங்களால் பணிகள் தாமதமடைந்து, திட்டம் முழுமையாக நிறைவடைய 2026ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் திட்டத்தின் எஞ்சிய பணிகளை விரைவாக நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், ரூ.500 மில்லியன் மேலதிக நிதியும் ஒதுக்கப்பட்டது. டிட்வா புயல் காரணமாக சில தடைகள் ஏற்பட்ட போதிலும், திட்டத்தை விரைவாக நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
முழுமையாக நிறைவடைந்துள்ள லக்கல புதிய நகர நீர் வழங்கல் திட்டத்தின் ஊடாக 21 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 6,700 குடும்பங்களில் வசிக்கும் 25,000 பேருக்கு சுத்தமான குடிநீர் வழங்கப்படவுள்ளது.
இத்திட்டத்திற்கான மொத்த செலவு சுமார் ரூ.4,995 மில்லியன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
களுகங்கை நீர்த்தேக்கத்திற்கு நீரை வழங்கும் களுகங்கையிலிருந்து ரம்புக்கொலுவ பகுதியில் நீர் பெறப்பட்டு, கரடமுல்ல நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட பின்னர் மக்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளது.
இந்தத் திட்டத்தின் முக்கிய சிறப்பம்சமாக, சுத்திகரிக்கப்பட்ட நீரை மின்சாரப் பயன்பாடின்றி ஈர்ப்பு விசையின் மூலம் விநியோகிக்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீர் விநியோகத்திற்கான மின்சாரச் செலவை கணிசமாகக் குறைக்க முடியும்.
மேலும், நக்கிள்ஸ் மலைத்தொடரில் இருந்து உருவாகும் தூய்மையான நீரோட்டத்திலிருந்து நீர் பெறப்படுவதால், நீரைச் சுத்திகரிக்க தேவையான இரசாயனங்களின் பயன்பாடும் குறைவாக இருக்கும் என பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் தினசரி சுமார் 4,000 கனமீற்றர் நீரை சுத்திகரிக்கும் திறன் காணப்படுகின்றது.
இந்தத் திட்டம் 2026 ஆகஸ்ட் 12ஆம் திகதி மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ள நிலையில், அதன் இறுதிக்கட்ட பணிகளை மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் ஹேமந்த உள்ளிட்ட குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

