ஹோல்புறூக் தமிழ் மகா வித்தியாலயத்தில் 47 மாணவர்களுக்கு முதலுதவி பயிற்சி

ஹோல்புறூக் தமிழ் மகா வித்தியாலயத்தில் 47 மாணவர்களுக்கு முதலுதவி பயிற்சி
நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டம் 3, ஹோல்புறூக் தமிழ் மகா வித்தியாலயத்தில் தெரிவுசெய்யப்பட்ட 47 மாணவர்களுக்கு சென் ஜோன் அம்புலன்ஸ் அமைப்பின் ஊடாக முதலுதவி மற்றும் பாடசாலை விபத்துக்களைத் தடுப்பது தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டன.
பயிற்சிகளை நிறைவு செய்த மாணவர்களுக்கான சின்னம் சூட்டும் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று பாடசாலை அதிபர் B. வில்லியம் ரூப்பஸ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதியாக நுவரெலியா மாவட்ட சென் ஜோன் அம்புலன்ஸ் படைப் பிரிவின் ஆணையாளர் திருமதி அனோமா சமரஜீவ கலந்து கொண்டதுடன், நுவரெலியா கல்வி வலயத்தின் பிரதி கல்விப் பணிப்பாளர் கே. யசோதரன், நுவரெலியா மாவட்ட சென் ஜோன் அம்புலன்ஸ் படைப் பிரிவின் உதவி ஆணையாளர் பி. சசிகாந்தன் உள்ளிட்ட பலர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
மாணவர்கள் இசை வாத்தியங்களுடன் பிரதான மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து, மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. இதன்போது முதலுதவிப் பயிற்சியை நிறைவு செய்த 47 மாணவர்களுக்கும் சின்னங்கள் சூட்டப்பட்டதுடன், சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
பாடசாலையில் முதலுதவிப் பிரிவை ஆரம்பித்து, மாணவர்களுக்கு இப்பயிற்சிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை பாடசாலை ஆசிரியர்களான வைத்தியர் ஏ.வி. ஜோர்ஜ் மற்றும் மைக்கல் வோல்டர்.கிங்ஸ்லி ஆகியோர் முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த பாடசாலை அதிபர் வில்லியம் ரூப்பஸ்,“பாடசாலையின் வளர்ச்சியை மேலும் சிறப்பான முறையில் முன்னெடுப்பதே எனது நீண்டகால கனவாகும். அதற்கமைய மாணவர்களின் கல்வி வளர்ச்சியுடன், அவர்களிடம் தலைமைத்துவப் பண்புகளையும் சமூகப் பொறுப்புணர்வையும் வளர்க்கும் வகையில் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம்.
அதன் ஒரு கட்டமாகவே பாடசாலையில் முதலுதவிப் பிரிவை ஆரம்பித்துள்ளோம். பாடசாலையில் எதிர்பாராத வகையில் விபத்துக்கள் அல்லது அவசர நிலைமைகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில், பயிற்சி பெற்ற மாணவர்கள் உரிய முறையில் முதலுதவி வழங்குவதற்கு இந்தத் திட்டம் உதவியாக அமையும்.
இதன் மூலம் மாணவர்களிடையே தலைமைத்துவப் பண்புகள், பொறுப்புணர்வு மற்றும் பிறருக்கு உதவும் மனப்பான்மை ஆகியவை வளர்ச்சியடையும். எதிர்காலத்தில் சிறந்த மாணவர்களாகவும் பொறுப்புள்ள சமூக உறுப்பினர்களாகவும் அவர்களை உருவாக்குவதற்கு இவ்வாறான செயற்பாடுகள் சிறந்த வாய்ப்பாக அமையும்” என தெரிவித்தார்.
ஹோல்புறூக் தமிழ் மகா வித்தியாலயத்தில் மாணவர்களின் பாதுகாப்பையும் தலைமைத்துவத் திறன்களையும் மேம்படுத்தும் வகையில் முதலுதவிப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளமை பெற்றோர் மற்றும் சமூகத்தினர் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

