வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு மாட்டாகொட உதைபந்தாட்டக் கழகத்தினால் 3வது ஆண்டாக அன்னதானம் வழங்கும் நிகழ்வு.
வத்தளை, நாயக்ககந்தை பிரிவிலுள்ள “மாட்டாகொட உதைபந்தாட்டக் கழகத்தின்” ஏற்பாட்டில் 3வது ஆண்டாக ஒழுங்கு செய்யப்பட்ட மாபெரும் அன்னதான தன்சலை நிகழ்வு இன்றைய தினம் (30) மாட்டாகொட விளையாட்டு மைதானத்தில் (நாயக்ககந்த மைதானம்) வெகுவிமர்சையாக நடைபெற்றது.
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, “பகிர்ந்துண்ணல்” எனும் உன்னத நோக்கோடும், மாபெரும் கருணையோடும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த அன்னதான நிகழ்வு நண்பகல் 12.00 மணி முதல் ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்றது.
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வத்தளை நகரசபை உறுப்பினரும் மாட்டாகொட உதைபந்தாட்டக் கழக உறுப்பினருமான S. சசிகுமார், நாங்கள் தமிழர்களாக இருந்தாலும், இலங்கை நாட்டில் நடைபெறும் அனைத்து கலாசார விழாக்களையும் பாகுபாடின்றி இணைந்து கொண்டாடி வருகிறோம் என்று குறிப்பிட்டார்.
மேலும் இனம், மதம், மொழி என எந்தவொரு வேறுபாடும் இன்றி இலங்கையர் என்ற ரீதியில் ஒற்றுமையாக வாழ்ந்து வருவதாகவும், அதன் வெளிப்பாடாகவே எமது கழக உறுப்பினர்களின் பங்களிப்போடு 3வது முறையாக இந்த அன்னதான நிகழ்வை நடத்துவதாகவும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார். நாட்டில் அண்மையில் ஏற்பட்ட டித்வா புயல் பாதிப்புகள் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும், மக்கள் அனைவரும் வெசாக் தினத்தன்று ஒன்று கூடி, தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து இந்த நாளை மகிழ்ச்சியாகக் கொண்டாடுவதாகவும் அவர் விவரித்தார்.
இங்கு வருகை தந்த அனைத்து மக்களும் திருப்தியாகவும், மகிழ்ச்சியாகவும் உணவருந்த வேண்டும் என்ற நோக்கில், சுமார் 1,800 க்கும் மேற்பட்ட மதிய உணவுப் பொதிகள் இதன்போது வருகை தந்த மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக வத்தளை-மாபொல நகரசபை தலைவர் திரு. பிரகாஷ் மற்றும் நகரசபை உறுப்பினர் சஜீவ்குமார் ஆகியோருடன் வத்தளை பொலிஸ் அதிகாரி திரு. ஜகத் மற்றும் பல முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்த அன்னதான நிகழ்விற்கான முழுமையான நிதிப் பங்களிப்பை மாட்டாகொட உதைபந்தாட்டக் கழகத்தின் உறுப்பினர்கள் மற்றும் வெளி முக்கியஸ்தர்களும் இணைந்து வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எதிர்காலத்தில் இதனை விடவும் இன்னும் சிறப்பான முறையில் இந்த நற்பணியைத் தொடர எதிர்பார்ப்பதாகக் கழகத்தினர் நன்றியோடு கூறினர்.

