மேளதாளத்துடன் அடிக்கல் நாட்டினர்; 150 நாட்கள் கடந்தும் பணிகள் ஆரம்பமாகவில்லை!

115 நாட்களில் பாலம் அமைக்கப்படும் என மேளதாளத்துடன் அடிக்கல் நாட்டினர்; 150 நாட்கள் கடந்தும் பணிகள் ஆரம்பமாகவில்லை!

டிட்வா புயலினால் சேதமடைந்த நுவரெலியா பஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள பாலம் இதுவரை நிர்மாணிக்கப்படவில்லை – 61 இலட்சம் ரூபாய் திட்டத்தின் செலவு, ஒப்பந்த நடைமுறை மற்றும் தாமதம் தொடர்பில் மக்கள் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றனர்.

டிட்வா புயலினால் சேதமடைந்த நுவரெலியா பஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள பாலத்தை மீண்டும் நிர்மாணிப்பதற்காக 115 நாட்களுக்குள் பணிகளை நிறைவு செய்வதாக உறுதியளித்து, மேளதாளங்கள் முழங்கவும் நடனக் குழுக்களின் பங்களிப்புடனும் கோலாகலமாக அடிக்கல் நாட்டப்பட்டிருந்த போதிலும், அந்த நிகழ்வு இடம்பெற்று சுமார் 150 நாட்கள் கடந்துள்ள நிலையில் இதுவரை நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

குறித்த பாலத்தின் நிர்மாணப் பணிகளுக்காக 54 இலட்சம் முதல் 61 இலட்சம் ரூபாய் வரையிலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சரின் பங்கேற்புடன் நடைபெற்ற அடிக்கல் நாட்டும் நிகழ்வு பாரம்பரிய மேளதாளங்கள் மற்றும் நடனக் குழுக்களின் பங்களிப்புடன் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றிருந்தது.

இதன்போது 115 நாட்களுக்குள் நிர்மாணப் பணிகள் நிறைவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், குறித்த காலக்கெடு கடந்தும் சுமார் 150 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், ஆரம்பகட்ட நிர்மாணப் பணிகளைக்கூட முன்னெடுக்காதிருப்பது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வளவு சிறியதொரு பாலத்தை நிர்மாணிப்பதற்கு சுமார் 61 இலட்சம் ரூபாய் மக்கள் நிதியைச் செலவிடத் தீர்மானித்தமைக்கான தொழில்நுட்ப மற்றும் நிதி அடிப்படை என்னவென்றும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

அத்துடன், குறித்த திட்டத்திற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டபோது உரிய கொள்முதல் நடைமுறைகள் பின்பற்றப்பட்டனவா? ஒப்பந்த நடைமுறையில் வெளிப்படைத்தன்மை பேணப்பட்டதா? என்பது தொடர்பிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதேவேளை, அப்பகுதியைச் சேர்ந்த சில வர்த்தகர்கள் குறித்த பாலத்தைத் தமது சொந்த முயற்சியில் இலவசமாக நிர்மாணித்துக் கொடுக்க முன்வந்திருந்ததாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான தன்னார்வ முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றைப் பரிசீலிக்காமல் மக்கள் நிதியைச் செலவிட்டு இத்திட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்தமைக்கான காரணம் என்னவென்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

பாலத்தைப் பயன்படுத்த முடியாத நிலை காரணமாக பொதுமக்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். அவ்வழிகளின் பாதுகாப்பு தொடர்பிலும் பல்வேறு சிக்கல்கள் காணப்படுவதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அத்துடன், சேதமடைந்த பழைய பாலத்தின் எஞ்சியுள்ள பகுதிகளால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் தொடர்பிலும் அதிகாரிகள் உடனடி கவனம் செலுத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

மக்கள் நிதியில் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்ட ஒரு அபிவிருத்தி வேலைத்திட்டம் இவ்வாறு தாமதமடைவதற்கான காரணம் என்ன? அடிக்கல் நாட்டும் நிகழ்வின்போது அறிவிக்கப்பட்ட 115 நாட்கள் என்ற காலக்கெடு ஏன் நிறைவேற்றப்படவில்லை?

ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தால் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்காதிருப்பதற்கான காரணம் என்ன?

இவ்வாறான கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டிய பொறுப்பு நுவரெலியா மாநகர சபை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இருப்பதாகச் சுட்டிக்காட்டும் பிரதேச மக்கள், குறித்த திட்டத்தின் தற்போதைய நிலைமை, ஒதுக்கப்பட்ட நிதி, நிர்மாணப் பணிகள் தாமதமடைவதற்கான காரணம் மற்றும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ள திகதி ஆகியவற்றை வெளிப்படையாக மக்களுக்கு அறிவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

manel