முத்துராஜவெல புதிய எண்ணெய் தாங்கிகள் வளாகத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

ஜனாதிபதி தலைமையில் ஜெட் A-1 விமான எரிபொருள் குழாய் மற்றும் முத்துராஜவெல புதிய எண்ணெய் தாங்கிகள் வளாகத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

வலுசக்தி சந்தையில் வலுவான அரச பங்கைப் பேணி, மக்களுக்கு செயற்திறனாக சேவையாற்றுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்- ஜனாதிபதிவலுசக்தி சந்தையில் வலுவான அரச பங்கைப் பேணி, மக்களுக்கு செயற்திறனாக சேவையாற்றுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என்றும், அதனை நிறைவேற்றுவதில் கடந்த இரண்டு ஆண்டுகளில் வெற்றிகரமான முன்னேற்றம் அடையப்பட்டுள்ளது என்றும், தற்பொழுது இலங்கையில் வலுவான மற்றும் மக்களுக்குச் சுமையாக இல்லாத வலுசக்திச் சந்தையொன்று கட்டியெழுப்பப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) ஜெட் A-1 குழாய் கட்டமைப்பு மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனைய நிறுவனத்திற்கு (CPSTL) உரிய இரண்டு புதிய எண்ணெய் தாங்கி சேமிப்புத் தொகுதிகளின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் இன்று (02) முற்பகல்கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

வலுசக்தித் துறையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் அரசாங்கத்தின் தேசிய இலக்கிற்கு இணையாக, விமான எரிபொருள் விநியோகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தல், விநியோகச் செலவைக் குறைத்தல் மற்றும் எதிர்கால விமான எரிபொருள் தேவைக்கு அவசியமான கொள்ளளவு வசதிகளை அதிகரித்தல் என்பவற்றுக்காக இத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

இந்நாட்டு விமான சேவைகள் துறையின் எதிர்காலத் தேவையை வெற்றிகரமாக நிவர்த்தி செய்தல், விமான எரிபொருள் விநியோகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் மற்றும் போக்குவரத்துச் செலவுகளைக் குறைத்தல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு, முத்துராஜவெல மற்றும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றை இணைக்கும் வகையில், விமான எரிபொருள் விநியோகத்திற்கு மாத்திரம் ஒதுக்கப்பட்ட விசேட குழாய் கட்டமைப்பும் அதனுடன் இணைக்கப்பட்ட தாங்கித் தொகுதியும் நிர்மாணிக்கப்படுகின்றன.

92,000 கன மீட்டர் மொத்த கொள்ளளவு கொண்ட ஐந்து புதிய ஜெட் ஏ-1 எரிபொருள் தாங்கிகளின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படுவதுடன், இரண்டு பெரிய ஜெட் ஏ-1 தாங்கிகள் (ஒவ்வொன்றும் 30,000 கன மீட்டர் வீதம்), இரண்டு நடுத்தர அளவிலான தாங்கிகள் (ஒவ்வொன்றும் 15,000 கன மீட்டர் வீதம்) மற்றும் 2,000 கன மீட்டர் கொண்ட மேலதிக தாங்கியும் இதில் உள்ளடங்கும்.

முத்துராஜவெல தாங்கி வளாகத்திலிருந்து 21 கிலோமீட்டர் நீளமும் 10 அங்குல விட்டமும் கொண்ட நிலத்தடி குழாய் மூலம் விமான நிலையத்திற்கு எரிபொருள் விநியோகக் குழாய் கட்டமைப்பு இணைக்கப்படும்.

இத்திட்டம் 30 மாதங்களில் நிறைவுசெய்யப்படவுள்ளது.மேலும், பெற்றோலியத் தொழில்துறையின் சேமிப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதற்கும் விரிவுபடுத்துவதற்கும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன சேமிப்பு முனைய நிறுவனத்தால் (CPSTL) முத்துராஜவெல முனையத்தில் மூன்று புதிய சேமிப்புத் தாங்கிகளை அமைக்கும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன.

இது நிறைவடைந்ததும், தலா 15,000 கன மீட்டர் கொள்ளளவு கொண்ட 2 தாங்கிகள் மற்றும் 10,000 கன மீட்டர் கொள்ளளவு கொண்ட 1 தாங்கி என மூன்று தாங்கிகள் கொண்ட தொகுதியின் மூலம் 40,000 கன மீட்டர் மேலதிக மொத்த சேமிப்புக் கொள்ளளவு வழங்கப்படும்.

இதன் மூலம் முனையத்தின் பெற்றோலிய சேமிப்புத் திறன்கள் மேலும் மேம்படுத்தப்படுவதுடன், நாட்டின் பெற்றோலிய உட்கட்டமைப்பு வசதிகளைத் தொடர்ந்து மேம்படுத்துவதற்கும் இது உறுதுணையாக அமையும்.

இத்திட்டம் 18 மாத ஒப்பந்தக் காலத்தைக் கொண்டதுடன், இது 2028 ஏப்ரல் மாதத்தில் நிறைவடையவுள்ளது.மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் செயற்பாட்டு திறன் ஆகியவற்றை உறுதிசெய்து, தொடர்புடைய சர்வதேச தரநிலைகள் மற்றும் தொழிற்துறையில் அங்கீகரிக்கப்பட்ட சிறந்த நடைமுறைகளுக்கு இணங்க இந்தத் தாங்கிகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

இந்த மேலதிக சேமிப்புத் திறனானது, நாட்டின் எரிபொருள் கையிருப்புகளை வலுப்படுத்தவும், செயற்பாட்டு நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தவும், நாட்டில் அதிகரித்து வரும் வலுசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு எரிபொருள் தயாரிப்புகளை நம்பகத்தன்மையுடனும் தடையின்றியும் விநியோகிக்க உதவுகிறது.

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் மற்றும் வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க;நாம் இன்று வலுசக்தி பரிமாற்ற யுகத்தில் இருக்கிறோம்.

உலகம் மிக வேகமாக சுத்தமான வலுசக்தி பயன்பாட்டை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

அதற்கு மின்சார வாகனங்களின் பயன்பாடு மிகவும் அவசியம். நமது நாடும் இப்போது அந்த திசையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

சூரிய சக்திப் பயன்பாடும் அதற்கு முக்கியமான பங்களிப்பை வழங்குகிறது. 2029 ஆம் ஆண்டளவில் சூரிய சக்தி மூலம் 1200 மெகாவாட் மின்சாரத் திறனை தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்க எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு நாடாக நாம் எரிபொருள் விலைக் கட்டுப்பாடு மற்றும் எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்துதல் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.

அதில் பொதுமக்களுக்கும் பாரிய பொறுப்பு உள்ளது. குறிப்பாக, நமது வலுசக்தி நுகர்வு முறையை மாற்றியமைத்துக் கொள்வது அவசியமாகும்.

அதன்போது, அதிக மின்சாரத் தேவை உள்ள நேரங்களைத் தவிர்த்து மின்சாரத்தைப் பயன்படுத்துதல், எரிபொருளை மீதப்படுத்தக்கூடிய வாகனங்களை, குறிப்பாக மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவதும் இந்த எரிபொருள் பாதுகாப்பிற்கு பாரிய உதவியாக அமையும்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா;மத்திய கிழக்கு யுத்த காலத்தில் நாம் பெரும் சவாலுக்கு முகங்கொடுத்தோம்.

எனினும், ஜனாதிபதியும் தலையிட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கி, சூழ்நிலையை மிகச் சிறப்பாகக் கையாண்டார்.

அதனால், உலகச் சந்தையில் டீசல் விலை 91% ஆல் அதிகரித்தபோது, எமது நாட்டில் அது 39.5% இலால் மட்டுமே அதிகரிக்கப்பட்டது. உலகச் சந்தையில் பெட்ரோல் விலை 80% க்கும் அதிகமாக அதிகரித்தபோது, எமது நாட்டில் அது 41% இனால் மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான முறையில் எரிபொருள் குறைந்த விலையில் வழங்கப்பட்ட போதிலும், கூட்டுத்தாபனம் இவ்வருடம் 28 பில்லியன் இலாபம் ஈட்டியுள்ளது. நாம் கடந்த வருடமும் 36 பில்லியன் ரூபா இலாபத்தைப் பெற்றோம்.

இவ்வளவு இலாபங்கள் இருக்கும்போது எரிபொருள் விலை குறைக்கப்படாதது ஏன் என்ற கேள்வி எழக்கூடும்.ஆனால், அந்த இலாபத்தைப் பயன்படுத்தி நிறுவனத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தித் திட்டங்கள் பலவற்றை நாங்கள் ஆரம்பித்துள்ளோம்.

எரிபொருள் சேமிப்புத் திறனை அதிகரிப்பதற்காக கைவிடப்பட்டிருந்த ஆறு தாங்கிகளை நிர்மாணிப்பது உள்ளிட்ட 11 தாங்கிகளின் கொள்ளளவை சேர்த்தல், 90 வருடங்களுக்கு மேல் பழைமையான எமது எரிபொருள் நிரப்பும் பிரிவை நவீனமயமாக்கி முத்துராஜவெல போன்ற கென்ட்ரி (Gantry) கட்டமைப்பை நிர்மாணித்தல், துறைமுகத்திலிருந்து கொலன்னாவை வரை எரிபொருளை இறக்குவதற்காக இரண்டு புதிய குழாய்களை அமைத்தல், கட்டுநாயக்க வரை ஜெட்- A1 எரிபொருளைக் கொண்டு செல்வதற்காக புதிய குழாய் வழித் தடத்தை அமைத்தல் உள்ளிட்ட குழாய் கட்டமைப்பை முறைப்படுத்துதல் மற்றும் புதிய குழாய்வழித் தடங்களைப் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அந்த இலாபத்தைப் பயன்படுத்தி நாங்கள் செயற்படுத்தி வருகிறோம்.

எனவே, அதன் பலனை நாங்கள் மீண்டும் மக்களுக்கே வழங்கியுள்ளோம்.விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன, வலுசக்தி பிரதி அமைச்சர் அர்கம் இல்யாஸ், பாராளுமன்ற உறுப்பினர் குமார ஜயகொடி, வலுசக்தி அமைச்சின் செயலாளர் மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரசல் அபொன்சு ஆகியோருடன், வெளிநாட்டுத் தூதுவர்கள், வலுசக்தி அமைச்சு மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட அரச அதிகாரிகள், சினோபெக் நிறுவனத்தின் பிரதிநிதிகள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

manel