முகாம்களில் தங்கியுள்ள மக்களை விரைவாக மீள்குடியேற்ற திட்டம்
நிவாரண முகாம்களில் தற்போது சுமார் 7,000 பேர் தங்கியுள்ளதாகவும், அவர்களை 2 அல்லது 3 மாதங்களுக்குள் மீளக் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
முழுமையாக சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 6,138 ஆக உள்ளதாகவும், அந்த மக்களை மீளக் குடியமர்த்துவதற்குச் சில காலம் எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் இதனைத் தெரிவித்தார்.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் தரவுகளின் அடிப்படையில், பகுதி அளவில் சேதமடைந்த வீடுகளில் ஆபத்து இல்லை எனக் கண்டறியப்பட்டால், அவர்களை மீண்டும் அந்த வீடுகளிலேயே குடியேற்ற முடியுமா என்பது குறித்து ஆராய்ந்து, அதற்கான பணிகளை விரைவுபடுத்துவதாகவும் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.

