மின்சாரம் தாக்கி மரத்தில் சிக்கிய இரு மாணவர்கள் : ஒரு மாணவருக்கு தீக்காயம்
வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குயில்வத்தை பகுதியில் மரம் வெட்டுவதற்காக சென்ற இரு பாடசாலை மாணவர்கள் உயர் மின்னழுத்த மின்சாரம் தாக்கி மரத்தில் சிக்கிய நிலையில், பொலிஸாரின் துரித நடவடிக்கையால் மீட்கப்பட்டுள்ளனர்.
வட்டவளை குயில்வத்தை தமிழ் மகா வித்தியாலயத்தில் 7 மற்றும் 8ஆம் தரங்களில் கல்வி பயிலும் 12 மற்றும் 13 வயதுடைய இரு மாணவர்களே இந்த விபத்தில் சிக்கியுள்ளனர்.
தமது வீட்டிற்கு மேல்பகுதியில் உள்ள புதர்நிறைந்த பகுதியில் காய்ந்திருந்த மரக்கட்டைகளை வெட்டுவதற்காக மரத்தில் ஏறியபோது, மரத்திற்கு மேலாகச் சென்றிருந்த உயர் மின்னழுத்த மின்கம்பிகள் மரத்துடன் உரசியதன் காரணமாக மின்சாரம் மரத்தின் ஊடாகக் கசிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் மின்சாரம் தாக்கிய மாணவர்கள் அலறிய நிலையில் இருந்ததை அவதானித்த தோட்டத் தொழிலாளர்கள், அந்த வீதியில் போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்டிருந்த வட்டவளை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு பொலிஸ் கான்ஸ்டபிள் சஞ்சீவ என்பவருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து, குறித்த பொலிஸ் அதிகாரி உடனடியாக வட்டவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சந்தன கமகே ஊடாக நோட்டன்பிரிட்ஜ் மின்சார வாடிக்கையாளர் சேவை நிலையத்தின் அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதன்பேரில், குறித்த உயர் மின்னழுத்த மின்கம்பி அமைப்பின் மின்சாரம் உடனடியாக துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸார் இரு மாணவர்களையும் பாதுகாப்பாக மீட்டு வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
மின்சாரம் தாக்கிய மாணவர்களில் ஒருவரின் உடலில் பல இடங்களில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், மற்றைய மாணவருக்கு அதிர்ச்சி நிலை மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மின்கம்பிகளுடன் உரசிய நிலையில் காணப்பட்ட மரத்தின் கிளைகளை வெட்டி அகற்றுவதற்கான நடவடிக்கைகளை இலங்கை மின்சார சபை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

