மனிதத் தோலுடன் பாண் விற்பனை

மனிதத் தோலுடன் பாண் விற்பனை

மனிதத் தோலுடன் பாண் விற்பனை செய்யப்பட்டதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஹட்டன் நகரின் வெதுப்பகம் ஒன்றில் வாங்கிய பாணில் மனித விரல்களில் ஏற்பட்ட காயத்தின் தோல் துண்டுகள் இருந்ததைக் கண்டு சுகாதார அதிகாரிகளுக்கு நேற்று (25) வாடிக்கையாளர் ஒருவரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

ஹட்டன் பிரதான நகரில் இயங்கும் வெதுப்பகம் ஒன்றில் 180/= ரூபாய்க்கு பெற்றுக்கொண்ட பொதி செய்யப்பட்ட பாணினை திறந்துபார்த்த போது இடையில் மனித விரல்களில் ஏற்பட்ட காயத்தின் தோல் துண்டுகள் காணப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஹட்டன் டிக்கோயா மாநகரசபையின் பொது சுகாதார பரிசோதகரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணைகள் முன்னெடுத்த சுகாதார பரிசோதகர்கள் பாணில் கை விரலில் ஏற்பட்ட காயத்தின் தோல் துண்டுகள் இருப்பதை உறுதி செய்து வெதுப்பகத்தின் உரிமையாளர் மீது பல்வேறு குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் வெதுப்பகத்தின் உரிமையாளருக்கு எதிராக ஹட்டன் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த வெதுப்பகத்தில் இதற்கு முன்னரும் சுகாதாரமற்ற உணவு வகைகள் தயாரித்து விநியோகிக்கப்படுவதாக ஏற்கனவே கிடைக்கப்பெற்ற முறைபாடுகளுக்கு சுகாதார அதிகாரிகளால் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுள்ளது எனவும் விசாரணைகளை மேற்கொள்ளும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

எஸ். ரஜீவன்